பக்கம் எண் :

நானே உதாரணம் 447

என்னும் செய்யுளைக் கூறிவிட்டு விரிவாகப் பொருள் சொன்னேன்.
பிறகு, “இப்பாடலில் ஸந்நிதானத்தின் கொடை வகைகள்
சொல்லப்பட்டிருக்கின்றன. ஒவ்வொரு பொருளைத் தனியே பெற்றவர்கள் பலர்
உண்டு. எல்லாவற்றையும் ஒருங்கே பெற்றதற்கு உதாரணம் நானே. நான்
மடத்து அன்னமே பல வருஷங்களாக உண்டு வருகிறேன். இடையில்
கட்டிக்கொண்டிருப்பதும் என் பெட்டியில் இருப்பதும் இவர்கள் அளித்த
வஸ்திரங்களே கழுத்தில் உள்ள கௌரீசங்கரகண்டி இவர்கள் வழங்கியதே,
காதில் அணிந்து கொண்டுள்ள கடுக்கனும், கையில் அணிந்திருக்கும்
மோதிரமும் இவர்கள் கொடையே. ஆகவே என் குட்சியும் (வயிறும்) இடையும்
கண்டமும் காதும் கையும் ஸந்நிதானத்தின் கொடையைச் சொல்லும், ஆனால்
வேதநாயகம் பிள்ளையவர்கள் இந்தப் பாட்டில் சொல்லியிருக்கிற
இறுமாப்புடைய நடையும் கைக்குடையும் என்னிடம் இல்லை; அவற்றை நான்
விரும்பவும் இல்லை” என்று சொல்லி நிறுத்தினபோது சபையினர் யாவரும்
சந்தோஷத்தை ஆரவாரத்துடன் தெரிவித்தனர். “ஒரு கிறிஸ்தவ கனவான்
இவ்வளவு தூரம் பாராட்டியிருக்கிறாரே!” என்று பலர் வியப்புற்றனர். ஏதோ
பெரிய காரியமொன்றைச் செய்து நிறைவேற்றியது போன்ற திருப்தியை நான்
அடைந்தேன்.

நான் அந்தச் சபையில் அவ்வாறு பிரசங்கம் செய்ததைச் சுப்பிரமணிய
தேசிகர் கேட்டுப் புன் சிரிப்பினால் தம்முடைய உவகையை வெளிப்படுத்தினர்.
அவர் புன்னகை அவரது சந்தோஷத்தை மாத்திரம் வெளிப்படுத்தியதாக நான்
அப்போது எண்ணினேன். அதில் வேறு குறிப்பு இருந்ததென்றும், ‘இறுமாப்
புடைய நடையும் குடையும்’ இல்லை என்று நான் கூறியது அவர் உள்ளத்திற்
பதிந்திருந்ததென்றும் அப்போது எனக்குத் தெரியவில்லை; பிறகு தெரிய
வந்தது.

மணி ஐயர் விடை பெற்றுக்கொண்டு சென்றார். சுப்பிரமணிய தேசிகர்
சில தினங்கள் அங்கே தங்கியிருந்தார். அப்பால் என்னையும் மகா
வைத்தியநாதையர் முதலியவர்களையும் புகைவண்டி மார்க்கமாகத்
திருநெல்வேலி சென்று இருக்கும்படியும், தாம் சாலை மார்க்கமாக வருவதாகவும்
சொல்லி எங்களை அனுப்பினார். நாங்கள் அவ்வாறே திருநெல்வேலி போய்ச்
சேர்ந்தோம்.