பக்கம் எண் :

454என் சரித்திரம்

அவ்விருவரும், தேசிகர் விம்மிதமடைந்து பரபரப்புடன் அந்த அரிய
பதிகங்களைக் கேட்க முந்துவரென்று எண்ணியிருக்கலாம். தேசிகரிடம்
அத்தகைய பரபரப்பு ஒன்றும் தோற்றவில்லை. அவர் அமைதியாக, “எங்கே,
சில பாடல்களை கேட்கலாம்” என்று கட்டளையிட்டார்.

பதிகங்களின் ஆசிரியராகிய கனவான் அப்பொழுதும் வாய்
திறக்கவில்லை. புலவர் தாமே பாடல்களைச் சொல்லத் தொடங்கினார்.
ஒவ்வொரு பதிகத்தையும் சொல்லி, “இன்ன பதிகத்தைப் போலச் செய்தது இது”
என்று தேவாரப் பதிகத்தையும் குறிப்பித்து வந்தார். கஜக்கோலை வைத்து
அளந்து பாட்டுக்குப் பாட்டு, வார்த்தைக்கு வார்த்தை மாற்றி வைத்தவை போல
அவை தோற்றின. ஒன்றேனும் ரஸமாக இல்லை.

நாங்கள் இடையிடையே சிறிது ஆட்சேபம் செய்வோம். அப்படிச்
செய்யும்போது அந்தக் கனவானை நோக்கி அவற்றைக் கூறுவோம். அவர் தாம்
விடை சொல்லாமல் புலவர் முகத்தைப் பார்த்து ஹூங்காரம் செய்வார். புலவர்
எதையாவது சமாதானமாகச் சொல்வார்.

தேசிகருக்கு மேலே கேட்பதில் விருப்பமில்லை. வெறுப்பே தோற்றியது.
“மிகவும் சிரமமாக இருக்கும்; ஒரு பானைச்சோற்றுக்கு ஒரு சோறுதானே பதம்?
போதும்” என்று சொல்லி நிறுத்தச் செய்தார். பின்னும் அவகாசம்
அளித்திருந்தால் அப்புலவர் அவ்வளவு பாடல்களையும் சொல்லி எங்கள்
காதைத் துளைத்திருப்பாரென்பது நிச்சயம்.

அந்தக் கனவானுக்குச் சரிகை வஸ்திரமும் பட்டும் அளித்து மறுநாளே
தேசிகர் அனுப்பிவிட்டார். அவர் போன பிறகு எங்களைப் பார்த்து, “இந்த
ஸம்மானம் எதற்காகக் கொடுத்தது, தெரியுமா?” என்று கேட்டார்.

அவர் கருத்து ஒரு வகையாகத் தெரிந்தாலும் நான் வேண்டுமென்று,
“அவர் பாடிய தேவாரப் பதிகங்களுக்காக” என்றேன்.

“சிவ சிவா! அவர் ஒரு கனவானாதலாலும் பாதகாணிக்கை
வைத்தமையாலும் அவர் மனம் திருப்தியடைய வேண்டுமென்று எண்ணியே
அந்தச் சம்மானம் வழங்க வேண்டியிருந்தது. தேவாரப் பதிகங்கள் எப்படி
இருந்தன?” என்று கேட்டார் தேசிகர்.

“அக் கனவான் இயற்றியிருப்பரென்று தோற்றவில்லை.”