பக்கம் எண் :

456என் சரித்திரம்

ருடன் ஒரு முனிஷியும் வந்திருந்தார். தேசிகருடைய கட்டளையின்படி
கலெக்டரைப் பாராட்டி நானும் பிறரும் சில பாடல்களை இயற்றிச்
சொன்னோம். அவற்றின் பொருளை அந்த முனிஷி கலெக்டருக்கு
விளக்கினார். நான் இயற்றிய பாடல்களில் ஒன்றன் கடைசிப் பகுதி வருமாறு:

“,,,,,,,பென்னிங்டன் துரையே நின்னைக்
குற்றாலந் தனிற்கண்ட குதுகலமிங் கெவராலுங்
கூறொணாதே.”

சர்க்கரை பாரதியார்

ஒரு நாள் காலையில் நானும் சண்பகக் குற்றாலக் கவிராயரும் வேறு
சிலரும் குற்றால மலைக் காட்சிகளைக் கண்டு மகிழ்ந்து வரப் போனோம்.
மலையின் வடபாலுள்ள சோலை வழியே செல்லும்போது எங்கிருந்தோ இனிய
சங்கீத ஒலி வந்தது. நாங்கள் அது வந்த வழியே சென்றபோது ஒரு
மாளிகையை அடைந்தோம். அதன் வாசலில் ஒரு சிறிய திண்ணையில் தனியாக
உட்கார்ந்து ஒருவர் உரத்துப் பாடிக்கொண்டிருந்தார். தாமே பாடுபவராயின்
அவ்வளவு பலமாகப் பாட வேண்டிய அவசியம் இல்லை.

நாங்கள் அவரை அணுகியவுடன் அவர் பாட்டை நிறுத்திவிட்டு,
“நீங்கள் யார்?” என்று எங்களைக் கேட்டார். சுப்பிரமணிய தேசிகர் அங்கே
வந்து தங்கியிருப்பதையும், நாங்கள் அவருடன் வந்திருப்பதையும்
தெரிவித்தோம். அவர் வேம்பத்தூர்ப் பிச்சுவையருடைய தம்பி என்பதும் அவர்
பெயர் சர்க்கரை பாரதி என்பதும் தெரிந்தன.

நாங்கள் பேசும்போதே உள்ளே யிருந்து, “பலே! ஏன் பாட்டு
நின்றுவிட்டது?” என்று அதிகாரத் தொனியோடு ஒரு கேள்வி வந்தது. “புத்தி”
என்று சொல்லியபடியே ஒரு வேலைக்காரன் உள்ளேயிருந்து ஓடி வந்து
பாரதியாரை விழித்துப் பார்த்தான். அவர் நடுங்கி மீண்டும் தாளம் போட்டுப்
பாடத் தொடங்கினார்.

எங்களுக்கு ஒன்றும் விளங்கவில்லை. “நீங்கள் இங்கே உள்ள
திருவாவடுதுறை மடத்திற்கு வாருங்கள். அங்கே விரிவாகப் பேசலாம்.
ஸந்நிதானம் உங்களைக் கண்டால் ஸந்தோஷமடையும்” என்று சொன்னோம்.
அவர் பாடிக்கொண்டே இருந்தமையால் “ஆகட்டும்” என்று சொல்ல
இயலாமல் தலையை அசைத்தார். நாங்கள் விடைபெற்று வந்தோம்.

அன்று மாலை சர்க்கரை பாரதியார் மடத்திற்கு வந்து தேசிகரைப்
பார்த்தார். அவர் சொன்ன விஷயங்களைக் கேட்டு நாங்கள்