பக்கம் எண் :

ஸ்தல தரிசனம் 461

சமுத்திரக் கரையில் அமைந்துள்ள செந்திற்பெருமான் திருக்கோயில்
கண் கொள்ளாக் காட்சியாக இருந்தது. ஆண்டவனுக்குப் பிரார்த்தனை
செலுத்துவோர்களுடைய கூட்டம் மிக அதிகம். உலகத்தில்
தெய்வபக்தியென்னும் சுடரை அவியாமலே காப்பாற்றி வரும் ஸ்தலங்களுள்
திருச்செந்தூர் ஒன்று. கலியுக வரதனாகிய முருகக் கடவுளின் திருவருளைப்
பலவிதமான அதிசயச் செயல்களால் காணுவதற்கு இடமாயிருப்பது அந்தத்
திவ்ய ஸ்தலம்.

கந்தர் கலிவெண்பா

எங்களுடன் வந்திருந்த இராமலிங்கத் தம்பிரானுடைய ஆட்சியிலுள்ள
திருப்பனந்தாள் மடத்தில் ஆதி புருஷராக வணங்கப்படுபவர் குமரகுருபர
ஸ்வாமிகள். அப்பெரியார் இளமையில் ஐந்து வருஷம் வரையில் ஊமையாக
இருந்து பிறகு செந்திற் பெருமான் திருவருளால் வாக்குப் பெற்றனர். அப்போது
அவர் முதல் முதலில் செந்திலாண்டவன் விஷயமாக, ‘கந்தர்கலி வெண்பா’
என்ற பிரபந்தத்தைப் பாடினார். திருவருளால் அமைந்த வாக்கென்ற
கருத்தினால் தமிழ் நாட்டில் அந்நூலைப் பயபக்தியோடு பலர் பாராயணம்
செய்து வருவார்கள். நான் அதை அடிக்கடி படித்து மகிழ்வதுண்டு.
திருச்செந்தூரில் தங்கிய காலத்தில் அதனைப் பல முறை பாராயணம்
செய்தேன். இராமலிங்கத் தம்பிரான் தம் ஆதீன முதல்வரால் இயற்றப் பெற்ற
தென்ற பெருமையுள்ளத்தோடு படித்தும் கேட்டும் வந்தார். கந்தர்
கலிவெண்பாவின் இறுதியில் குமர குருபரர் தமக்கு ஆசு முதல் நாற்கவியும்
பாடும் வன்மை வேண்டுமென்று பிரார்த்திக்கின்றார். நான் அந்தப் பகுதியை
மீட்டும் மீட்டும் படித்துச் செந்திலாண்டவனைத் துதித்தேன். எனக்கும் நல்ல
கவித்துவம் வேண்டுமென்ற ஆசை உள்ளிருந்து தூண்டியது.

எனது தீர்மானம்

திருச்செந்தூரில் இருந்தபோது சுப்பிரமணிய தேசிகர் என்னையும்
மகாவைத்தியநாதையரையும் அழைத்து, ஊருக்குப் போய்ச் சில தினங்கள்
இருந்து விட்டுத் திருப்பெருந்துறைக்கு வந்து விடும் படியும், அதற்குள் தாமும்
திருப்பெருந்துறைக்கு வந்துவிடக் கூடுமென்றும் கட்டளையிட்டனுப்பினார்.
நாங்கள் புறப்பட்டோம். இராமலிங்கத் தம்பிரானும் விடை பெற்றுத்
திருப்பனந்தாளுக்குச் சென்றார். செந்திலாண்டவன் திருவருளால் இனிச்
செய்யுட்களை மிகுதியாக இயற்றிப் பழக வேண்டுமென்ற தீர்மானத்துடன் நான்
திருவாவடுதுறைக்கு வந்து சேர்ந்தேன்.