பக்கம் எண் :

464என் சரித்திரம்

விசாலமான ஊற்றொன்று வெட்டி அதற்கும் வேலி கட்டப்பட்டிருந்தது.
அதற்குக் கிழக்கே தவசிப் பிள்ளைகளும் சைவர்களும் பிறரும் நீராடுவதற்குப்
பெரிய ஊற்று ஒன்று இருந்தது. அந்த ஊற்றுக்களைப் பாதுகாத்து வரும்
பொருட்டு ஒருவன் நியமிக்கப்பட்டிருந்தான். பொன்னுப்பிள்ளை யென்பது
அவன் பெயர்.

ஊற்றுக்களை நன்றாக இறைத்துச் சுத்தமாக வைத்திருப்பதும், யார் யார்
எந்த எந்த ஊற்றில் ஸ்நானம் செய்யலாமோ அவர்களையன்றி மற்றவர்கள்
அவற்றை உபயோகிக்காமல் காவல் புரிவதும் ஆகிய வேலைகளை அவன்
பார்த்து வந்தான். அவனுக்கு உதவியாகச் சிலர் இருந்தனர்.

நாங்கள் மருத மரத்து நிழலில் உட்கார்ந்திருப்பதைக் கண்டு அவன்
வந்து குமாரசாமித் தம்பிரானை வந்தனம் செய்து நின்றான். “எல்லாம் சரியாக
இருக்கிறதா?” என்று தம்பிரான் விசாரித்தார். “சரியாக இருக்கிறது ஊற்றில்
ஜலம் நிறைய ஊறியிருக்கிறது. ஸ்நானம் செய்ய எழுந்தருளலாம்” என்று
அவன் சொன்னான்.

அந்தக் காவலாளன் மிகவும் கடுமையானவன். உரியவர்களல்லாத வேறு
யாரேனும் ஊற்றுக்கருகில் வந்தால் அவர் காலில் அடிப்பான். பித்தளைப்
பாத்திரங்களைக் கொண்டு வந்து ஊற்றை அணுகினால் அவற்றைப் பிடுங்கித்
தூர எறிவான். மண் பாத்திரங்களாயிருந்தால் உடைத்தெறிவான். பெண்களுக்கு
அவனிடம் அதிக பயம். அவன் முகம் எப்போதும் கோபக் குறிப்போடே
இருக்கும். வார்த்தையும் கடுமையானது. அப்படியிருந்தால்தான் தன் வேலை
ஒழுங்காக நடைபெறும் என்பது அவனது திடமான அபிப்பிராயம். நிழலும்
ஊற்றும் இனிய காட்சிகளை அளித்த அந்த இடத்தில் அவனுடைய முகம்
வெயிலின் கடுமைக்குத் துணையாக விளங்கியது.

தம்பிரான் என்னைப் பார்த்து, “இவனைத் தெரியுமா?” என்று கேட்டார்.
“நன்றாகத் தெரியுமே” என்று நான் சொன்னேன். அவன் தன் வேலையைக்
கவனிக்கப் போய்விட்டான். “இவன் எப்பொழுதும் கடுமையாகவே
இருக்கிறானே. இவன் முகத்தில் சந்தோஷ அறிகுறியை ஒருநாளேனும்
பார்த்ததில்லை. இவனைச் சிரிக்கும்படி செய்யமுடியுமோ?” என்று தம்பிரான்
என்னைக் கேட்டார். “பார்க்கலாம்” என்று சொல்லி நான் அந்தப் பேர்
வழியின் விஷயமாக ஒரு பாடல் செய்ய யோசித்தேன். அவனது கடுமையான
தோற்றத்தின் சார்பினாலோ, எதனாலோ, என் செய்யுளிலும் சிறித கடுமை
புகுந்து கொண்டது. நான் இயற்றிய செய்யுள் திரிபாக அமைந்தது. நான் அதை
முடித்துத் தம்பிரானிடம் சொல்லிக் காட்டினேன்.