பக்கம் எண் :

468என் சரித்திரம்

வந்து சேர்ந்தார். சில தினங்களுக்குப் பிறகு தேசிகரிடமிருந்து
தந்தையார் முதலியவர்களோடு திருப்பெருந்துறைக்கு வந்து சில காலம் இருக்க
வேண்டுமென்று எனக்கு ஓர் உத்தரவு வந்தது. எங்களுக்கு வேண்டிய
சௌகரியங்களைப் பண்ணுவித்து அனுப்ப வேண்டுமென்று காறுபாறு
கண்ணப்பத் தம்பிரானுக்கும் திருமுகம் வந்தது. நான் என் தாய் தந்தையரை
அழைத்துக்கொண்டு திருப்பெருந்துறையை நோக்கிப் புறப்பட்டேன். காறுபாறு
தம்பிரான் சௌகரியங்கள் செய்து அனுப்பும்போது, “காட்டு மார்க்கமாக
இருக்கும்; ஆனாலும் அங்கங்கே இருக்கும் மடபதிகள் கவனித்துக்
கொள்வார்கள்” என்று என் தந்தையாரை நோக்கிக் கூறினார். நான், “நாட்டுச்
சாலைவழியே போவதனால் அஸௌகரியம் நேராது” என்று சிலேடையாகச்
சொன்னேன். நாட்டுச் சாலை யென்பது நாங்கள் போகவேண்டிய வழியில்
பட்டுக்கோட்டைக்கு அருகிலுள்ள மடத்துக்குரிய பெரிய கிராமம்.

நாங்கள் திருப்பெருந்துறையை அடைந்தோம். எங்களுக்காகத் தனி
விடுதி ஒன்று அமைக்கப் பெற்றிருந்தது. சுப்பிரமணிய தேசிகரது
தரிசனத்தையும் சல்லாபத்தையும் பெற எண்ணிப் பல பிரபுக்களும்
வித்துவான்களும் வந்து வந்து சென்றார்கள். சிங்கவனம் சுப்பு பாரதியார்,
வேம்பத்தூர்ப் பிச்சுவையர், மணமேற்குடி கிருஷ்ணையர், மேலகரம் திரிகூட
ராசப்பக் கவிராயர் முதலிய வித்துவான்களுடன் பழகி இன்புற்றேன்.

பிச்சுவையர்

பிச்சுவையர் சிறந்த ஆசுகவி. அவர் சுப்பிரமணிய தேசிகரைப் புகழ்ந்து
தாம் நூதனமாக இயற்றிய பாடல்களையும் வேறு சமயோசிதப் பாடல்களையும்
சொல்லிக் காட்டினார். நான் வினோதார்த்தமாகச் சில சில ஆக்ஷேபங்களைச்
செய்தேன். அவர் சில சில இடங்களில் சிலேடையை உத்தேசித்து
வார்த்தைகளின் உருவத்தை மாற்றியிருந்தார். இயல்பான இலக்கண வரம்புக்கு
உட்படாமல் புறநடையின் சார்பை ஆராயவேண்டிய சில பிரயோகங்களைச்
செய்திருந்தார். நான் ஆக்ஷேபித்தபோது சுப்பிரமணிய தேசிகர்
அவ்வாக்ஷேபங்கள் உசிதமானவை என்பதைத் தம் புன்னகையால் தெரிவித்தார்.
பிச்சுவையர், “அவசரத்திற் பாடும் செய்யுட்களில் இவ்வளவு இலக்கணம்
பார்த்தால் முடியுமா?” என்று சொல்லிவிட்டு உடனே பின்வரும் பாடலைச்
சொன்னார்:

“விஞ்சுதலை யார்சேட வித்தகனென் றாலுநின்முன்
அஞ்சு தலையுடைய னாவனால்-விஞ்சுபுகழ்க்
கோமுத்தி வாழ்சுப் பிரமணியக் கொண்டலே
மாமுத் தியைவழங்கு வாய்.”