பக்கம் எண் :

புதிய வாழ்வு 479

ஆனால் கடவுளுடைய எண்ணம் வேறு விதமாக இருந்தது. மடத்தின்
தொடர்பு ஒன்றோடு நில்லாமல் என் ஆசிரியத் தொழிலும், ஆராய்ச்சியும்,
தமிழ்த் தொண்டும் மேன்மேலும் விரிவடைய வேண்டிய நல்லூழ் எனக்கு
இருந்தது போலும். அது தன் வேலையைச் செய்ய ஆரம்பித்தது.
கும்பகோணத்திலிருந்து தியாகராச செட்டியாரைக் குருவாரமாகிய அன்று
பிற்பகல் திருவாவடுதுறையிற் கொணர்ந்து சேர்த்தது. என் புதிய வாழ்வு
தொடங்கிற்று.

செட்டியார் வரவு

தியாகராச செட்டியார் மடத்துக்கு வந்தபோது சின்னச் பண்டார
ஸந்நிதியாகிய ஸ்ரீ நமசிவாய தேசிகர் பகற் போசனம் செய்து விட்டுச்
சிரமபரிகாரம் செய்திருந்தார். அப்போது இரண்டு மணி இருக்கும். தேசிகர்
விரும்பியபடி அச்சமயம் சில மாணாக்கர்களுக்கு நான் காஞ்சிப்புராணம்
பாடஞ்சொல்லி வந்தேன். நேரே நாங்கள் இருந்த இடத்திற்குச் செட்டியார்
வந்தார். தம் வரவை அறிந்துவந்த நமசிவாய தேசிகரை வணங்கிவிட்டு அவர்
உட்கார்ந்து பேசினார். ஒரு மணி நேரம் வரையில் பேசி இருந்து விட்டு, “மகா
சந்நிதானத்தைத் தரிசிக்கலாமென்று வந்தேன். உத்தரவு கொடுக்க வேண்டும்”
என்று சொல்லிப் புறப்பட்டார். அவர் சொல்லியபடி நானும் உடன் சென்றேன்.

ஸ்ரீ சுப்பிரமணிய தேசிகரிடம் நாங்கள் போன சமயம் அவர்
ஒருவருக்குக் கம்ப ராமாயணத்திலுள்ள ஐயங்களை நீக்கிக் கொண்டிருந்தார்.
செட்டியாரும் நானும் அதைக் கவனித்தோம். சந்தேகம் கேட்டவர் தம்
வேலையை முடித்துக் கொண்டு போன பிறகு செட்டியாரும் சுப்பிரமணிய
தேசிகரும் கம்ப ராமாயணத்தின் சிறப்பைப்பற்றிச் சம்பாஷித்தார்கள்.

செட்டியாரின் விண்ணப்பம்

இப்படி ஒரு மணி நேரம் சம்பாஷணையான பிறகு செட்டியார், “ஒரு
விண்ணப்பம்” என்றார்.

சுப்பிரமணிய தேசிகர் : என்ன! சொல்லலாமே.

செட்டியார்: சாமிநாதையருக்கு என் வேலையைச் செய்விக்க
எண்ணியிருக்கிறேன். கிருபை செய்து சந்நிதானம் அதற்கு உத்தரவளிக்க
வேண்டும்.