பக்கம் எண் :

484என் சரித்திரம்

தேசிகர் உணர்ந்து கொண்டதாகவே தோற்றியது. அவர் மனம்
இளகியது. சிறிது மௌனமாகவே இருந்தார். “சரி; என்ன செய்ய வேண்டும்?”
என்று கேட்டார்.

தெய்வ சங்கற்பம்

அந்தக் கேள்வியிலே அனுகூலமான தொனி இருப்பதைச் செட்டியார்
தெரிந்து கொண்டார். உடனே “இவருக்கு வேலை செய்விக்க வேண்டுமென்று
கோபால ராவ் அவர்களுக்கு ஒரு கடிதமும், அவருக்கு ஒரு யோக்கியதா
பத்திரமும் ஸந்நிதானத்தின் திருக்கரத்தால் அளிக்க வேண்டும்” என்று
கேட்டுக் கொண்டார். தேசிகர் ராயசக்காரராகிய பொன்னுசாமிசெட்டியாரை
வருவித்து இரண்டையும் சொல்லி எழுதுவித்தார். யோக்கியதா பத்திரம்
வருமாறு.

இந்தப் பத்திரிகையிலெழுதப்பட்டிருக்கிற சாமிநாதையர் நமது ஆதீன
வித்துவான் மீனாட்சி சுந்தரம் பிள்ளையவர்களிடத்தில் ஆறு வருஷகாலம்
இலக்கண இலக்கியங்கள் நன்றாய் வாசித்ததுமன்றி நம்மிடத்திலும் நான்கு
வருஷகாலமாக வாசித்துக் கொண்டிருக்கிறார். இலக்கண இலக்கியங்களைத்
தெளிவாய்ப் போதிக்கிற விஷயத்தில் சமர்த்தர். நல்ல நடையுள்ளவர்.

பிரமாதி வருஷம் கும்பரவி சுப்ரமணிய

3Œ திருவாவடுதுறை பண்டாரச் சன்னதி. யாதீனம்

இரண்டையும் எழுதுவித்த பிறகு கோபாலராவுக்குரிய கடிதத்தில்
கையெழுத்திட்டு யோக்கியதா பத்திரிகையில் கையெழுத்துப் போடும் சமயத்தில்
சபாபதி பூஜையின் மணி கண கணவென்று அடித்தது. அப்பொழுது செட்டியார்,
‘இவருக்கு வேலையாகிவிட்டது” என்று சந்தோஷத்துடன் எழுந்து கை
கொட்டிக் கூத்தாடினார். என்னை அனுப்பும் விஷயத்தில் மன அமைதி
பெறாமல் இருந்த தேசிகருக்கும் பூர்ண சம்மதம் உண்டாகிவிட்டது. “நாம்
இவரை அனுப்புவதற்குச் சம்மதம் இல்லாமலிருந்தாலும், தெய்வம்
கட்டளையிடுகிறது. தெய்வ சங்கற்பத்தைத் தடுக்க இயலுமா? சரி, நல்ல வேளை
பார்த்து இவரை அனுப்புகிறோம். கவலைப்பட வேண்டாம்” என்று அவர்
சொன்னார். செட்டியார் மிக்க குதூகலத்தை அடைந்தார்.