பக்கம் எண் :

488என் சரித்திரம்

திருந்ததும் நாற்பது ரூபா விலையுள்ளதுமாகிய தந்தப் பிடியமைந்த
பட்டுக் குடை ஒன்று ஆகியவற்றையும் கொணரச் செய்து ஒவ்வொரு
பெட்டியிலும் ஒவ்வோர் அரைக்கால் ரூபாய் போட்டு எனக்கு வழக்கினார்.
மெய்க்காட்டு உத்தியோகத்தில் இருந்த ஷண்முகம் பிள்ளை என்பவரை
அழைத்து, “நாளைத்தினம் நீர் கும்பகோணத்துக்குப் போய் இவர் காலுக்குப்
பாப்பாஸ் ஜோடு வாங்கிக் கொடுத்து இந்தக் குடைக்கு உறையும் போட்டு
இன்னும் இவருக்கு என்ன என்ன ஆக வேண்டுமோ அவற்றைச் செய்து விட்டு
வாரும்” என்றார்.

என்னைப் பார்த்து, “சாமிநாதையர், நாம் மதுரை கும்பாபிஷேகத்திற்குப்
போயிருந்த போது ஒரு மகா சபையில் மணி ஐயரவர்களுக்கு முன்பு
வேதநாயம் பிள்ளை பாடலைச் சொல்லி விட்டு ‘இறுமாப்புடைய நடையும்
குடையும் என்னிடம் இல்லை’ என்று சொன்னது நினைவில் இருக்கிறதா?
அந்தக் குறை இரண்டும் இப்போது தீர்ந்து விட்டன” என்று சொன்னர். நான்
வெகு நாளைக்கு முன் சொன்னதை ஞாபகம் வைத்திருந்து தேசிகர் அப்போது
செய்ததையும் அவர் அன்பையும் நினைந்து உருகினேன். “இறுமாப்புடைய
நடை என்றும் வராது” என்று சொன்னேன்.

“நீர் தியாகராச செட்டியார் ஸ்தானத்தை வகித்து நல்ல புகழ்
பெறுவதன்றிச் சென்னைக்கும் சென்று தாண்டவராய முதலியாரும்
மகாலிங்கையரும் விசாகப் பெருமாளையரும் இருந்து விளங்கிய ஸ்தானத்தைப்
பெற்று நல்ல கீர்த்தியடைந்து விளங்க வேண்டும்” என்று கூறித் தாம்பூலம்
கொடுத்தார்.

ஒரு தாய் தன் பிள்ளைக்கு உயர்ந்த பதவிகளெல்லாம் கிடைக்க
வேண்டுமென்று மனமார நினைந்து வாழ்த்துவதைப் போல இருந்தன அவர்
வார்த்தைகள். அந்தப் பேரன்பிலே ஊறியிருந்த போது அதன் முழு
அருமையும் எனக்குத் தெரியவில்லை. பிரியப் போகின்றோமென்ற நினைவு
வந்ததுந்தான் அதன் அருமை பன்மடங்கு அதிகமாகத் தோற்றியது.

என் மனநிலை

நல்ல வேளை வந்து விட்டது. நான் விடை பெற்றுக் கொண்டேன். என்
கால்கள் மெல்ல நடந்தன. உடம்பு நகர்ந்ததேயன்றி என் மனம் அங்கேயே
கிடந்தது. வரும் போது உக்கிராண வாசலில் என்னை அறியாமலே நின்றேன்.
நான் எந்தச் சமயத்தில் எந்தப் பண்டம் வேண்டுமானாலும் பெற்றுக்
கொள்ளும் இடமாகிய