பக்கம் எண் :

490என் சரித்திரம்

களுக்கு விடையளித்து விட்டு ஆகாரத்துக்குச் செல்ல எழுந்தார். அவ்வளவு
சீக்கிரத்தில் அவர் என்னை எதிர்பார்க்கவில்லை. ஆதலால் என்னைக்
கண்டவுடன் ஆச்சரியமடைந்து, “ஏது? இதற்குள் உங்களை அனுப்ப
ஸந்நிதானத்துக்கு மனம் வந்ததா?” என்றார்.

“ஆம், இன்று நல்ல நாளாக இருந்தமையால் என்னை அனுப்பினார்கள்.
திதியென்று சொல்லி நீங்கள் அவசரமாக வந்தீர்களே. சரியான காலத்தில் அது
நடந்ததா?” என்று கேட்டேன்.

செட்டியார் செய்த தந்திரம்

அவர் சிரித்துக் கொண்டே, “திதியும் இல்லை; ஒன்றுமில்லை
ஸந்நிதானத்துக்கு உங்களிடமுள்ள பிரியத்தை நன்கு அறிவேன். நான் அங்கே
தங்கியிருந்தால் திடீரென்று வேறு எதையாவது நினைத்து உங்களை அனுப்ப
முடியாதென்று சொன்னாலும் சொல்லக் கூடும். அந்தப் பயத்தால், அவர்கள்
வாக்களித்தவுடன் புறப்பட்டு விட்டேன், திடீரென்று புறப்படுவதற்குக்
காரணமாகத் திதியென்று ஒரு பொய்யைச் சொன்னேன். நல்ல காரியம்
செய்வதில் பொய் சொன்னால் தோஷமில்லை. ‘பொய்ம்மையும் வாய்மையிடத்த
புரை தீர்ந்த நன்மை பயக்குமெனின்’ என்னும் குறள் அதைத்தானே
சொல்லுகின்றது” என்றார்.

பிறகு அவர் ஆகாரம் உட்கொண்டு சிறிது நேரத்தில் வந்தார். அப்பால்
நானும் அவரும் நெடுநேரம் பேசினோம். சுப்பிரமணிய தேசிகர் எனக்கு
அளித்த சால்வை முதலியவற்றை எடுத்துக் காட்டினேன். மிக்க மகிழ்ச்சி
அடைந்தார். தாம் வேலைக்கு வந்த வரலாற்றையும், தம் வேலையை எனக்குச்
செய்விக்க நினைந்து இரண்டு வருஷங்களாக முயன்று வந்ததையும் அவர்
எடுத்துச் சொன்னார். காலேஜின் பெருமை, அங்குள்ள ஆசிரியர்களின் இயல்பு,
பாடம் சொல்லவேண்டிய முறை முதலிய பல உபயோகமான விஷயங்களையும்
கூறினார். அன்றிரவு அவர் வீட்டிலேயே தங்கினேன்.

புஸ்தகக் கட்டுகள்

மறுநாள் சனிக்கிழமை காலையில் எழுந்து காலைக் கடன்களை
முடித்துக்கொண்ட பிறகு செட்டியார் தம் பீரோவிலிருந்து ஏறக் குறைய நூறு
புஸ்தகங்களை எடுத்து மூன்று சவுக்கங்களில் பிரித்து மூன்று கட்டாகக்
கட்டினார். அவரிடமிருந்த ஒற்றை மாட்டு வண்டியில் அவர் அவற்றை வைத்து
அதில் என்னை ஏறச் செய்து தாமும் ஏறிக்கொண்டார். வண்டி புறப்பட்டது.

“உங்கள் திறமையை இந்தக் காலேஜ் ஆசிரியர்களுக்குத் தெரிவிக்க
வேண்டாமா? அதற்காகத்தான் உங்களை அழைத்துப் போகிறேன்” என்றார்
செட்டியார்.