பக்கம் எண் :

496என் சரித்திரம்

பேசத் தொடங்கினார். மடத்தின் பெருமையையும், பிள்ளையவர்கள்
பெருமையையும், நான் அங்கே படித்தவனென்பதையும், நான் அங்கே பாடம்
சொல்லி வந்ததையும், காலையில் நிகழ்ந்த எல்லாவற்றையும் அவர் விரிவாக
எடுத்துச் சொன்னார். கோபாலராவ் என்னை ஒரு முறை எற இறங்கப்
பார்த்தார்.

அப்போது ஸ்ரீநிவாசையர் என்னைப் பார்த்து, “காலையில் நீங்கள்
செய்த பாடலை இங்கே சொல்லிக் காட்டுங்கள்” என்றார். எனக்கு அது
ஞாபகமில்லாமையால் எந்த எந்த வார்த்தைகள் இருந்தனவென்று
யோசித்தேன். அதைச் சொல்லக் கால் மணிக்கு மேலாயிற்று. ஸ்ரீநிவாசையர்,
“காலையில் ஐந்து நிமிஷத்தில் சொல்லி விட்டீர்களே! இப்போது ஏன் தாமதம்
ஆகிறது?” என்றார். “வேறு புதிய செய்யுள் செய்யச் சொன்னால் உடனே
சொல்லி விடுவேன். அதே பாடலைச் சொல்லச் சொன்னதால் பதங்களை
ஞாபகப் படுத்திக் கொண்டிருந்தேன்” என்று சமாதானம் சொன்னேன்.

“செய்யுள் எளிய நடையில் இருக்கிறது. இங்கிலீஷில் அப்படி
யிருப்பதுதான் உயர்வு என்று சொல்வார்கள்” என்று கோபாலராவ் சொன்னார்.
அப்போது ஆயிரம் பேர்கள் சேர்ந்து என்னைப் பாராட்டியதைப் போன்ற
சந்தோஷத்தை அடைந்தேன்.

எழுதாக் கிளவி

அப்பால் செட்டியார் தாம் கொண்டுவந்த புஸ்தகங்களைக் காட்டி,
“எந்தப் புஸ்தகத்தையேனும் எடுத்துக் கொடுத்து இவரைப் பரீக்ஷை
செய்யலாம்” என்றார். கோபாலராவ் “அவசியமில்லை” என்று சொல்லச்
செட்டியார் பின்னும் வற்புறுத்தவே அவர் ஒரு புஸ்தகத்தை எடுத்துப் பிரித்து
என் கையில் அளித்தார். அது கம்ப ராமாயணம் அயோத்தியா காண்டத்தில்
மந்தரை சூழ்ச்சிப் படலத்தின் ஆரம்பமாக இருந்தது.

அப் பகுதியை முதலிலிருந்தே படித்துப் பொருள் சொன்னேன். கேட்ட
கோபால ராவ் திருப்தியுற்றுச் செட்டியாரைப் பார்த்து, “நீங்கள் சொன்னது சரி.
நான் ஆக்ஷேபிக்க இடமில்லை; நீங்களும் மற்ற ஆசிரியர்களும் ஏகோபித்துச்
சொல்லுவதைக் காட்டிலும் வேறு சாட்சி என்ன வேண்டும்? தங்களுடைய
‘டயம்டேபிளை’ இவரிடம் கொடுத்துவிடுங்கள். வருகிற திங்கட்கிழமை முதல்
இவர் காலேஜில் வேலை பார்க்கட்டும்” என்று சொன்னார். நேரில் சொன்ன
அந்த வார்த்தைகளே எனக்குக் கிடைத்த உத்தரவு. நான் விண்ணப்பமெழுதிப்
போடாமலே கிடைத்த உத்தரவு அது. எழுதாக் கிளவியாகிய அது பல
வருஷங்கள் சென்றும் என் காதில் இன்னும் ஒலிக்கிறது.