பக்கம் எண் :

498என் சரித்திரம்

எனக்கு வேலை கிடைத்ததைப் பற்றிய சந்தோஷத்தை அவர்
பலவாறாகத் தெரிவித்ததோடு அவ்வேலைக்கு வேறு பலர் முயற்சி
செய்ததையும் சொன்னார். “என்னிடம் படிக்கிறவர்களில் தக்கவர்கள் சிலர்
இருக்கிறார்கள். முத்திச் சிதம்பரம் பிள்ளை எனக்கு மிக்க பிரியமானவர்.
அவருக்கு இந்த வேலையைச் செய்விக்கலாம் என்று கூட ஒரு சமயம் நான்
நினைத்ததுண்டு. என்னருகில் இருக்கும் சதாசிவ செட்டியாரென்னும் என்
மாணாக்கர் தமக்குத் தெரிந்த ஒருவரை நியமிக்க வேண்டுமென்று சொன்னார்.
அன்றியும் நேரே பிரின்ஸிபாலுக்குச் சிலர் விண்ணப்பம் செய்திருப்பதாகவும்
தெரிகிறது. இவ்வளவு பேர்களுக்கிடையே உங்களை இங்கே அழைத்து
வந்துவிட வேண்டுமென்ற ஞாபகமே எனக்குப் பலமாக இருந்தது. அதை
எல்லோரிடமும் நான் வெளிப்படுத்தவில்லை. ராயரவர்களிடமும் வேறு சில
ஆசிரியர்களிடமுமே தெரிவித்திருந்தேன். ஐயா அவர்கள் காலத்திலேயே
உங்களுக்கு ஒரு வேலை கிடைக்க வேண்டுமென்பது என் விருப்பம். அதற்கு
நீங்கள் சம்மதிக்கவில்லை. ஐயாவுக்கும் உங்களைப் பிரிவதில் திருப்தியில்லை.
அப்பொழுது வேலைக்குப் போகாமல் இருந்ததும் ஒரு விதத்தில் நல்லதாயிற்று.
இப்போது ஐயா அவர்கள் இருந்தால் எல்லோரைக் காட்டிலும் மிக்க
சந்தோஷத்தை அடைவார்கள். அவர்கள் இல்லாவிட்டாலும் ஸந்நிதானமாவது
கண்டு திருப்தி அடையும்படி இருக்கிறதேயென்று ஆறுதலடைகிறேன். இந்த
ஸ்தானம் மிகவும் மதிப்புள்ளது. வர வர இதன் மதிப்பு அதிகமாகுமே யொழிய
ஒரு நாளும் குறையாது. ஐயாவிடம் படித்து ஐயாவுடைய அன்புக்குப்
பாத்திரமாக இருந்த நீங்கள் யாதொரு தடையும் இன்றி இந்த நிலைக்கு
வருவதற்கு அவர்களுடைய உள்ளன்பே காரணமாகுமென்று நான் உறுதியாகச்
சொல்லுவேன்” என்று செட்டியார் சொல்லி வந்தார்.

எனக்கு உடனே பிள்ளையவர்கள் ஞாபகம் வந்துவிட்டது. தியாகராச
செட்டியார் கூறியவையெல்லாம் உண்மை என்பதை என் உள்ளம் உணர்ந்தது.
“ஆம்; பிள்ளையவர்கள் இருந்தால் அவர்கள் அடையும் சந்தோஷத்துக்கு
எல்லை காண முடியாதுதான்” என்று எண்ணினேன். என் அகக் கண்ணில்
தாயனைய அப்புலவர் பெருமானுடைய சாந்தம் ததும்பிய முகத்தைக் கண்டேன்.

அந்த நினைவிலே லயித்திருந்த என்னைச் செட்டியார் தொடர்ந்து
பேசிய பேச்சு சுய நினைவுக்குக் கொணர்ந்தது. “உலகம் மிகப் பொல்லாதது;
ஜாக்கிரதையாக இருந்து நல்ல பெயர் வாங்க வேண்டும். நமக்குக் கௌரவம்
உண்டாவது படிப்பினாலேதான். அந்தப் படிப்பைக் கைவிடாமல் மேன் மேலும்
ஆராய்ந்து விருத்தி செய்து கெள்ள வேண்டும். காலேஜ் பிள்ளைகளிடம் நாம்
நடந்து