பக்கம் எண் :

எங்கள் ஊர் 5

இளமை தொடங்கியே உழைக்கும் பழக்கம் அவர்களிடம் காணப்
பட்டது. இவ்வாறு உழைப்பதிலும், நல்ல விஷயங்களைக் கேட்பதிலும் அவர்கள்
பொழுது போக்கிக்கொண்டு இருந்ததனால் வேறு விதமான காரியங்களைக்
கவனிக்க நேரமோ மனமோ இருப்பதில்லை.

எங்கள் ஊரில் அந்தணர்களுள் மாத்தியமர், வடமர், அஷ்ட
ஸகஸ்ரத்தினர் என்னும் வகையினர் இருந்தார்கள். விஷ்ணுவாலய பூஜை
செய்துவந்த நம்பியார் குடும்பம் ஒன்றும், சிவாலய பூஜகராகிய ஆதி சைவர்
குடும்பம் ஒன்றும் உண்டு. அஷ்ட ஸ்கஸ்ரத்தினரில் ஏழெட்டுக் குடும்பத்தினர்
வைதிகர்கள். அயலூரிலுள்ள அக்கிரகாரங்களுக்கு இவர்களே உபாத்தியாயர்கள்;
அங்கங்கே சென்று வைதிக காரியங்களைச் செய்வித்துச் சுக ஜீவிகளாக
வாழ்ந்து வந்தார்கள். இவர்கள் கவலையின்றியிருந்தமையால் தேக பலம்
மிக்கவர்களாக விளங்கினார்கள். வியாதி இவர்கள் இருந்த திக்கிலே கூட
வராது.

உத்தமதானபுரத்தில் அண்ணா ஜோஸ்யரென்ற ஓர் அந்தணர்
இருந்தார். அவர் ஜோஸ்யத்தினாலும் வைதிக வாழ்க்கையினாலும்
வேண்டியவற்றைப் பெற்றுக் கவலையின்றி ஜீவனம் செய்து வந்தார். நல்ல
கட்டுள்ள தேகம் வாய்ந்த அவர் ஒரு நாள் எங்கோ ஒரு கிராமத்தில்
பிராமணார்த்தம் (சிராத்த உணவு) சாப்பிட்டு விட்டு மார்பு நிறையச் சந்தனமும்,
வாய் நிறையத் தாம்பூலமும், குடுமியிற் பூவும் மணக்க உல்லாசமாக ஊருக்கு
வந்து கொண்டிருந்தார். நடுவழியே பாபநாசத்தில் தஞ்சாவூர் கலெக்டர்
‘முகாம்’ செய் திருந்தார். அவ்வழியே வரும்போது கலெக்டரும் சிரஸ்தேதாரும்
வெளியே நின்றுகொண்டிருந்தனர். கலெக்டர் வெள்ளைக்காரர்; சிரேஸ்தேதார்
இந்தியர்.

கலெக்டர் துரையினுடைய பார்வை அண்ணா ஜோஸ்யர் மேல்
விழுந்தது. அவருடைய அங்க அமைப்பையும் ரிஷபம் போன்ற நடையையும்
முகத்தில் இருந்த ஒளியையும் கண்டபோது கலெக்டர் துரைக்கு மிக்க
ஆச்சரியம் உண்டாயிற்று. திடீரென்று அவரை அழைக்கச் செய்து சிரஸ்தேதார்
மூலமாக அவரைச் சில விஷயங்கள் கேட்கலானார்.

கலெக்டர் :-உமக்குப் படிக்கத் தெரியுமா?
ஜோஸ்யர் :-தெரியும்.
கலெக்டர் :-கணக்குப் பார்க்கத் தெரியுமா?
ஜோஸ்யர் :-அதுவும் தெரியும். நான் ஜோஸ்யத்தில் நல்ல
பழக்கமுடையவன்; அதனால் கணக்கு நன்றாகப் போடுவேன்,