பக்கம் எண் :

50என் சரித்திரம்

வில்லை. “நம்முடைய ஊரில் நம் வீட்டில் பந்துக்கள் சூழ்ந்த இடத்தில்
மரணமடைய வேண்டும்” என்றே அவர் விரும்பினார். நதி தீரத்தைச்
சார்ந்துள்ள உத்தமதானபுரத்தை விட்டுக் காட்டு நாட்டில் உயிர் நீப்பதைப்பற்றி
நினைக்கும் போதே அவருக்குத் துக்கம் பொங்கும்.

ஒரு நாள் என் தகப்பனாரிடம் தம்முடைய கருத்தை என் பாட்டனார்
தெரிவித்தார். குடும்ப பாரத்தினால் நைந்த மனமுடைய அவருக்கு மீண்டும்
கவலை உண்டாயிற்று. “ஏதோ ஒரு விதமாக இங்கே வந்து நிலையாக வாழத்
தொடங்கினோம். கடவுள் கிருபையால், கடன் வாங்காமல் தம்பிக்குக்
கலியாணம் நடத்தினோம். ஊருக்குப் போனால் நாம் எவ்வாறு காலக்ஷேபம்
செய்ய முடியும்?” என்ற யோசனையில் ஆழ்ந்தார்.

என் பாட்டனாரோ அடிக்கடி தம் கருத்தை வற்புறுத்தி வந்தார்.
முதுமைப் பருவத்தில் அவருக்கு இருக்கும் ஆசையை நிறைவேற்றாமல்
இருப்பது பாவமென்ற நினைவும் என் பிதாவுக்கு உண்டாயிற்று. இரு
தலைக்கொள்ளி எறும்பு போலக் கலங்கினார். தம் பெற்றோரை
உத்தமதானபுரத்திற்கு அனுப்பிவிடலாமா என்றும் எண்ணினார். இறுதிக்
காலத்தில் தம் குமாரர் அருகில் இருக்கவேண்டுமென்று கருதியே
என்பாட்டனார் உடையார்பாளையத்திற்கும் பின்பு அரியிலூருக்கும் வந்தார்.
ஆதலின் தம்மைப் பிரிந்து அவர் இருத்தல் அரிது என்பதை நினைத்துப்
பார்த்த எந்தையார், “எவ்வாறானாலும் சரி; அவருடைய இஷ்டத்தைப் பூர்த்தி
செய்வதுதான் நம் கடமை” என்ற உறுதி பூண்டு அரியிலூர் ஜமீன்தாரிடமும்
மற்ற அன்பர்களிடமும் விடை பெற்றுக்கொண்டு தம் குடும்பத்துடன்
உத்தமதானபுரம் வந்து சேர்ந்தார்.

உத்தமதானபுரம் வந்த பின்பும் சில வருஷங்கள் என் பாட்டனாரும்
பாட்டியாரும் ஜீவித்திருந்தனர். இடையிடையே என் தந்தையார்
வெளியூர்களுக்குச் சென்று இராமாயணப் பிரசாங்கம் செய்து பொருள் ஈட்டி
வருவார். அப்படிச் சென்றிருக்கும் சில நாட்களில் என் பாட்டனாருக்கு மனக்
கலக்கம் அதிகமாகிவிடும். எந்தையார் அரியிலூருக்கும் சென்று ஜமீன்தாரையும்
தம் அன்பர்களையும் பார்த்து அவர்களால் கிடைக்கும் பொருளையும் தம்
ஸர்வ மானியத்திலிருந்து கிடைப்பதையும் பெற்று வருவார். பாபநாசத்தில்
இருந்த வக்கீல்களாகிய கபிஸ்தலம் கிருஷ்ணசாமி ஐயங்கார், வேங்கடராவ்
என்பவர்களும், போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்தியாலு நாயக்கரென்பவரும்
அக்காலத்தில் அவருக்குப் பொருளுதவி செய்து ஆதரித்து வந்தனர்.