பக்கம் எண் :

கோபாலராவின் கருணை 513

இந்த முக்கியமான நிகழ்ச்சிக்குப் பிறகு கோபாலராவ் என்பால் மிக்க
கருணை காட்டலானார். என்னைக் காணும் போதெல்லாம், “ஒழுங்காகப் பாடம்
நடந்து வருகிறதா? யாராவது தவறு செய்தால் உடனே சொல்லுங்கள்.
உங்களுக்கு ஏதாவது ஆகவேண்டுமானாலும் கூச்சமில்லாமல் தெரிவிக்கலாம்”
என்று அன்பொழுகக் கூறுவார். தம்முடைய பாதுகாப்பின் கீழ் வந்த என்னை
அங்கீகரித்துக்கொண்டதற்கு அறிகுறியாக இருந்தன அந்த வார்த்தைகள்.

அந்த வாரம் சனிக்கிழமை காலையில் தியாகராச செட்டியாரையும்
அழைத்துக் கொண்டு திருவாவடுதுறை சென்று அங்கே இரண்டு நாள்
சந்தோஷமாக இருந்து விட்டு வந்தேன். வரும்போது சுப்பிரமணிய தேசிகர்,
“செட்டியாருக்குக் கொடுத்த ஐம்பது ரூபாய் கொடுத்தால் அங்கே இரும்;
இல்லாவிட்டால் வேலையை விட்டு விட்டு இங்கே வந்து விடலாம்” என்று
சொல்லி அனுப்பினார்.

கோபால ராவ் அறிவித்தது

திங்கட்கிழமையன்று காலையில் பன்னிரண்டு மணிக்கு மேல் பி. ஏ.
இரண்டாவது வகுப்புக்குப் பாடம் சொல்லிக் கொண்டிருந்தேன். ஒரு மணியான
பிறகும் சிறிது நேரம் சொன்னேன். அப்போது திடீரென்று பிள்ளைகளெல்லாம்
எழுந்து நின்றார்கள். நான் காரணம் அறியாமல், “ஏன் நிற்கிறீர்கள்?” என்று
கேட்கவே அவர்கள், “ராயரவர்கள் வந்து தாழ்வாரத்தில் உங்களை
நோக்கிக்கொண்டு நிற்கிறார்கள்” என்றார்கள். நான் உடனே அவர்பாற்
சென்றேன். அவர், “உங்களை இரண்டு வருஷத்துக்குச் செட்டியாரவர்களுக்குக்
கொடுத்த ஐம்பது ரூபாயையே சம்பளமாகக் கொடுத்து ஸப்ரோட்டமாக
நியமித்திருப்பதாக டைரக்டர் துரையவர்கள் உத்தரவு அனுப்பியிருக்கிறார்கள்”
என்றார். நான் என் சந்தோஷத்தை முகக் குறிப்பால் தெரிவித்தேன்.

இந்தச் செய்தி தெரிந்த ஆசிரியர்களெல்லாம் மகிழ்ச்சியடைந்தனர்.
தியாகராச செட்டியாரோ கரைகடந்த ஆனந்தத்தில் மூழ்கினார். என்
மனநிலையைச் சொல்லுவதற்கு வார்த்தை ஏது?

முதற் சம்பளம்

அந்த வாரம் நான் இந்தச் சந்தோஷத்துடனும் கையிற் பெற்ற அரை
மாதச் சம்பளத்துடனும் திருவாவடுதுறை சென்றேன். “நீங்கள் வாங்கும் முதற்
சம்பளத்தை உங்கள் தாய் தகப்பனாரிடம் கொடுத்துப் பெற்றுக் கொள்ளுங்கள்”
என்று செட்டியார் சொல்லியிருந்தார். அப்படியே அந்த இருபத்தைந்து
ரூபாயை முதலில் என்