பக்கம் எண் :

516என் சரித்திரம்

பார்த்து அவர் சிறிது நின்று கையைக் கண்ணின் மேல் கவித்து
நிமிர்ந்து எங்களைக் கவனித்தார். எங்களுடன் வந்த ஆசிரியர்களுள்
கும்பகோணம் வாணாதுறையில் இருந்த காளி நாராயணசாமி ஐயரென்பவர்
ஒருவர். அவர் உத்ஸாகமாகவும் வேடிக்கையாகவும் பேசுபவர். அவர் அந்தக்
கிழவரைப் பார்த்து, “என்ன பார்க்கிறீர்கள்?” என்று கேட்டார்.

“ஒன்றும் இல்லை. நீங்களெல்லாம் சேஷப்பா வீட்டுக் கல்யாணத்துக்கா
வந்திருக்கிறீர்கள்? இந்த ராஜதானி முழுவதிலிருந்தும் ஜனங்கள்
வந்திருக்கிறார்களே! நீங்களெல்லாம் எந்த ஊர்க்காரர்கள்? என்ன
உத்தியோகம் பார்க்கிறீர்கள்?” என்றார் கிழவர்.

“நாங்களெல்லாம் கும்பகோணம் பள்ளிக்கூட உபாத்தியாயர்கள். அந்தக்
கலியாணத்துக்குத்தான் வந்திருக்கிறோம் என்று பதில் உரைத்தார்
நாராயணசாமி ஐயர்.

அவர் ஒவ்வொருவராகச் சுட்டி அவரவருடைய ஊர், பேர், சம்பளம்
ஆகியவற்றைப் பற்றி விசாரித்து வந்தார். ஒவ்வொருவரும் நூறு, இருநூறு,
முந்நூறு என்று தங்கள் சம்பளங்களைச் சொன்ன போது அவருக்கு ஒரே
பிரமிப்பாய்ப் போய் விட்டது. “என்ன! பள்ளிக்கூடத்து வாத்தியாருக்கு
இவ்வளவு சம்பளமா? எங்கள் காலத்திலெல்லாம் நாலு ஐந்து வாங்கிக்
கொண்டிருந்தார்கள்; பத்து ரூபாய் கிடைத்தால் அது குபேர சம்பத்துக்கு
ஸமானம்.”

கிழவர் கிராமத்திலுள்ள திண்ணைப் பள்ளிக்கூட உபாத்தியாயர்களையும்
எங்களையும் ஒரு வரிசையில் வைத்து எண்ணினாரென்று தெரிந்தது.
எல்லோரும் பள்ளிக்கூட வாத்தியார்களல்லவா? அவர் பின்னும் தம்முடைய
வியப்பைத் தெரிவிக்கலானார்.

“வெள்ளைக்காரர்கள் நூறு இருநூறென்று பணத்தை
அள்ளிவிடுகிறார்கள். உங்களுக்கும் அதிர்ஷ்டம் இருக்கிறது. மாசம் மாசம் கை
நிறையச் சம்பளம் வாங்குவதை இப்போதுதான் பார்க்கிறேன். சம்பளம்
வாங்குகிறார்கள். ஆனால்,,,,” கிழவர் மேலே பேசாமல் நிறுத்தினார். தாம்
சொல்ல வந்ததைச் சொல்லலாமா, வேண்டாமா என்று யோசித்ததாகத்
தெரிந்தது.

“என்னவோ சொல்ல வந்தீர்களே; ஏன் நிறுத்தி விட்டீர்கள்?” என்று
நாராயணசாமி ஐயர் கேட்டார்.

அதற்குள் அந்தக் கிழவருக்குப் பேசி வந்த பேச்சின் தொடர்பு
அறுந்துவிட்டது. அந்தக் கூட்டத்தில் இருந்த நான் அவர் கண்ணில் பட்டேன்.
பேச்சு என்னைப் பற்றித் திரும்பியது, “இந்தப் பிள்ளை