பக்கம் எண் :

520என் சரித்திரம்

சென்னையிலிருந்த சோடசாவதானம் சுப்பராய செட்டியாரும்
பதிப்பித்திருந்தனர். முதல் வெளியீடு ஸ்ரீநிவாச ராகவாசாரியருடையதே. புகார்க்
காண்டத்தின் முற்பகுதியின் மூலம் மாத்திரம் இருந்தது. “சேரமான் பெருமாள்
நாயனார் இயற்றிய சிலப்பதிகாரம்” என்று அவர் முகப்புப் பக்கத்தில்
பதிப்பித்திருந்தார்.

சிலப்பதிகார ஆராய்ச்சி

நான் வேலையை ஏற்றுக் கொண்ட வருஷத்தில் சிலப்பதிகாரத்தில்
கானல்வரி முதல் நான்கு காதைகள் பாடமாக வந்திருந்தன. அதைக் கோடை
விடுமுறை முடிந்தவுடன் பாடம் சொல்ல வேண்டியவனாக இருந்தேன். “இவர்
சிலப்பதிகாரத்தை எப்படிப் பாடம் சொல்லப் போகிறார்?” என்று சிலர்
சொல்லிக் கொண்டிருந்ததாக என் காதில் பட்டது. ஆகவே அதைக் கூடிய
வரையில் படித்துத் தெரிந்து கொள்ள வேண்டுமென்று நிச்சயம் செய்து
கொண்டேன். இருந்த அச்சுப் பிரதியின் உதவி கொண்டு விஷயத்தைத்
தெரிந்துகொள்ளுவது கஷ்டமாகவே இருந்தது. இந்த விஷயங்களை நான்
சுப்பிரமணிய தேசிகரிடம் சொன்னபோது அவர், “மடத்தில் ஏட்டுப்
பிரதியிருக்கிறது. சின்னப் பண்டாரத்தினிடம் படித்துத் தெரிந்து கொள்ளலாம்”
என்றார். பிள்ளையவர்களுக்கே சந்தேகமான புஸ்தகத்தில் நமசிவாய தேசிகர்
தேர்ச்சியடைய நியாயம் இல்லை. ஆனாலும் சிறந்த அறிவாளியாகிய
அவருடன் சேர்ந்து ஆராய்ந்து வரையறை செய்து கொள்வதில் பல லாபம்
உண்டு. அதனால் நான் சிலப்பதிகார ஏட்டுச் சுவடியை எடுத்துக் கொண்டு
நமசிவாய தேசிகரிடம் சென்று படித்தேன். இருவரும் கவனித்து ஆராய்ந்தோம்.
ஒரு விதமாகப் படித்து முடித்தோம்; பொருள் வரையறையும் செய்து
கொண்டோம்.

இப்படிச் சில நாட்கள் சென்றன. வேறு நூல்களைப் படிப்பதும், பாடஞ்
சொல்வதுமாக மற்ற நாட்கள் போய்க் கொண்டிருந்தன.

புது வீடு

விடுமுறை முடிந்தவுடன் கும்பகோணத்தில் நிரந்தரமாகக் குடித்தனம்
வைத்து விடலாமென்று என் தந்தையார் சொன்னார். அதன் பொருட்டு அங்கே
ஒரு வீடு பார்ப்பதற்காக அவர் கும்பகோணத்திற்கு புறப்பட்டார்.
புறப்படும்போது என் தாயார், “காவேரிக்குப் பக்கமாக இருந்தால் நல்லது”
என்றார். “காலேஜு க்கும் பக்கமாக இருந்தால் சௌகரியமாக இருக்கும்”
என்றேன் நான். அவர் கும்பகோணத்திற்கு நடந்தே சென்றார். ரெயில்
வண்டியில் ஏறும் வழக்கம் அவருக்கு இல்லை.