பக்கம் எண் :

524என் சரித்திரம்

எனக்கு ஏதோ ஒரு விதமான துயரம் உண்டாயிற்று. அவரோடு
எப்போதும் இருக்க வேண்டுமென்ற எண்ணம் எழுந்தது. வீட்டில் தம்மிடம்
பாடங் கேட்டு வந்த மாணாக்கர்களை எனக்குக் காட்டி ஒவ்வொருவரைப்
பற்றியும் தனித் தனியே எடுத்துக் கூறி, “இவர்கள் என்னிடம் சில சில
நூல்களைப் பாடம் கேட்டு வருபவர்கள். இனிமேல் இவர்களுக்கு நான் பாடம்
சொல்ல இயலாது. ஆதலால் இவர்களை உங்களிடம் ஒப்பிக்கிறேன். நான்
சொல்லி வந்த பாடங்களைத் தொடர்ந்து சொல்லி வரவேண்டும்” என்றார்.

“தங்கள் உத்தியோகத்தை ஏற்றுக்கொண்ட எனக்கு இது முக்கியமான
கடமை தானே?” என்று கூறினேன். அவ்வாறு என்னிடம் பாடம் கேட்கத்
தொடங்கியவர்கள் சதாசிவ செட்டியார், குமாரசாமி ஐயர் (வீர சைவர்),
ராமலிங்க பண்டாரம், சாமி பண்டாரம், கிருஷ்ணசாமி உடையார் என்பவர்கள்.

பாடம் சொல்லும் பழக்கம்

காலேஜில் பாடம் சொல்லுவது எனக்குச் சிரமமாகத் தோற்றவில்லை.
ஒவ்வொரு நூலையும் முதலிலிருந்து இறுதி வரையில் விரிவாகப் பாடம்
சொல்லப் பழகிய எனக்குக் காலேஜ் வகுப்புக்களுக்குப் பாடமாக வந்துள்ள சில
நூற்பகுதிகளைச் சொல்லுவது ஒரு பெரிய காரியமன்று. தனியே யாருக்கேனும்
மடத்திற் சொல்லியபடி பிரபந்தங்களையும் வேறு இலக்கண இலக்கியங்களையும்
சொல்ல வேண்டுமென்று விரும்பினேன். என் கல்வியறிவு மழுங்காமல்
இருப்பதற்கு அதுதான் வழியென்பதை அறிந்தவன் நான். இந்த நிலையில்
தியாகராச செட்டியார் தம் மாணாக்கர்களை என்னிடம் ஒப்பித்தது எனக்கு
மிக்க திருப்தியைத் தந்தது. அவர்களுக்கு உசிதமான பாடங்களைச் சொல்லத்
தொடங்கினேன். காலேஜ் பிள்ளைகளிற் சிலர் தனியே என் வீட்டிற்கு வந்து
சில நூல்களைப் பாடம் கேட்கலாயினர். கும்பகோணத்திலுள்ள வேறு சிலரும்
தமக்கு வேண்டிய நூற்களை என்னிடம் பாடம் கேட்டனர்.

செட்டியார் கடிதங்கள்

உபசாரம் நடந்த மறுநாள் செட்டியார் கும்பகோணத்தை விட்டுப்
புறப்பட்டுத் திருச்சிராப்பள்ளியைச் சார்ந்த திருவானைக்காவை அடைந்து
அங்கே வசித்து வரலானார். அவ்விடம் சேர்ந்தபின் கும்பகோணத்திலுள்ள
நண்பர்களுக்குக் கடிதங்கள் எழுதினார் எனக்கனுப்பிய கடிதத்தில் விடுமுறைக்
காலங்களில் வந்து தம்முடன் இருக்கவேண்டுமென்று வற்புறுத்தி எழுதினார்.
பின்னும்