பக்கம் எண் :

530என் சரித்திரம்

முதற் காட்சி

அவரைப் பார்க்க வேண்டுமென்ற ஆவல் முதலில் என்னிடமில்லை;
சுப்பிரமணிய தேசிகர் சொல்லியனுப்பினமையின் நான் சென்று
பார்க்கலாமென்று ஒருநாள் புறப்பட்டேன். அன்று வியாழக்கிழமை (21-10-1880).
அவர் இருந்த வீட்டை அடைந்து அவரைக் கண்டேன். நான் காலேஜில்
இருப்பதையும் மடத்தில் படித்தவனென்பதையும் சொன்னேன். அவர் யாரோ
அயலாரிடம் பராமுகமாகப் பேசுவது போலவே பேசினார். என்னோடு மிக்க
விருப்பத்துடன் பேசுவதாகப் புலப்படவில்லை. ‘அதிகாரப் பதவியினால் இப்படி
இருக்கிறார்; தமிழ் படித்தவராக இருந்தால் இப்படியா நம்மிடம் பேசுவார்?’
என்று நான் எண்ணலானேன்.

“நீங்கள் யாரிடம் பாடம் கேட்டீர்கள்?” என்று அவர் கேட்டார்.

“மகா வித்துவான் மீனாட்சி சுந்தரம் பிள்ளையவர்களிடம் பாடம்
கேட்டேன் என்றேன்.

பிள்ளையவர்கள் பெயரைக கேட்டவுடன் அவரிடம் ஏதாவது கிளர்ச்சி
உண்டாகுமென்று எதிர்பார்த்தேன். என்னுடைய உத்தியோகத்துக்காக என்னை
மதிக்காவிட்டாலும், பிள்ளையவர்கள் மாணாக்கனென்ற முறையிலாவது
என்னிடம் மனம் கலந்து பேசலாமே. அவர் அப்படிப் பேச முன் வரவில்லை.
கணக்காகவே பேசினார்.

“பிள்ளையவர்கள் பெயரைக் கேட்டுப் புடை பெயர்ச்சியே இல்லாத
இவராவது, தமிழில் அபிமானம் உடையவராக இருப்பதாவது! எல்லாம்
பொய்யாக இருக்கும்’ என்று நான் தீர்மானம் செய்து கொண்டேன்.

அவர் கேள்வி கேட்பதை நிறுத்தவில்லை. “என்ன என்ன பாடம்
கேட்டிருக்கிறீர்கள்?” என்ற கேள்வி அடுத்தபடி அவரிடமிருந்து வந்தது.
‘இதற்கு நாம் பதில் சொல்லும் வகையில் இவரைப் பிரமிக்கும்படி
செய்துவிடலாம்’ என்ற நிச்சய புத்தியோடு நான் படித்த புஸ்தகங்களின்
வரிசையை ஒப்பிக்கலானேன், “குடந்தை யந்தாதி, மறைசையந்தாதி,
புகலூரந்தாதி, திருவரங்கத்தந்தாதி, அழகரந்தாதி, கம்பரந்தாதி, முல்லையந்தாதி,
மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழ், முத்துக்குமாரசுவாமி பிள்ளைத்தமிழ்,
அகிலாண்ட நாயகி பிள்ளைத் தமிழ், சேக்கிழார் பிள்ளைத் தமிழ்,
திருக்கோவையார், தஞ்சை வாணன் கோவை. . . ” என்று சொல்லிக்
கொண்டே