பக்கம் எண் :

ஜைன நண்பர்கள் 535

அத்தியாயம்-89

ஜைன நண்பர்கள்

சேலம் இராமசுவாமி முதலியார் கொடுத்த சீவகசிந்தாமணிப் பிரதியைப்
படிக்க ஆரம்பித்தேன். அதில் நச்சினார்க்கினியர் உரையும் இருந்தது. அது
சீவகனைப் பற்றிய காவியம் என்பது மட்டும் எனக்குத் தெரிந்ததேயன்றி இன்ன
கதையை அது சொல்வது, இன்னவகையில் அது சிறப்புடையது என்பவற்றை
அறியேன். தமிழ் நூற்பரப்பை ஒருவாறு அறிந்துவிட்டதாக ஒரு நினைப்பு.
அதற்குமுன் எனக்கு இருந்தது. நான் கண்ட நூற் பரப்புக்குப் புறம்பேயிருந்த
சிந்தாமணி எனக்கு முதலில் பணிவை அறிவுறுத்தியது.

சிந்தாமணி ஆராய்ச்சி

புஸ்தகத்தை எடுத்துக் கொண்டு உட்கார்ந்தேன்.

“மூவா முதலா வுலகம்மொரு மூன்று மேத்தத் தாவாத வின்பந்
தலையாயது தன்னி னெய்தி ஓவாது நின்ற குணத்தொண்ணிதிச் செல்வனென்ப
தேவாதி தேவ னவன்சேவடி சேர்து மன்றே”

என்பது சிந்தாமணியிலுள்ள முதற்பாட்டு. இதிலுள்ள சொற்களில்
பொருள் விளங்காதது ஒன்றுமில்லை, ஆனால் ஒரு நூலின் காப்புச் செய்யுளாக
இருக்கும் அதில் எனக்கு ஒரு புதுமை தோற்றியது. நான் படித்த நூல்களில்
உள்ள விநாயக வணக்கமோ, சடகோபர் காப்போ அதில் இல்லை. ஜைன
சமயக் காவியத்தில் அந்த வணக்கங்கள் இருக்க நியாயமில்லை; பொதுவான
கடவுள் வணக்கமாக அது முதலில் எனக்குத் தோற்றியது. ‘மூவா முதலா
வுலகம் என்ற தொடருக்கு மாத்திரம் எனக்குப் பொருள் தெளிவாகவில்லை’

உரையைப் படிக்கலானேன். நச்சினார்க்கினியர் முதலில் காவிய
இலக்கணத்தை விரிவாக எழுதியிருக்கிறார். பிறகு சொல்லிலக்கணம் முதலியன
வருகின்றன. அக்காலத்தில் தொல்காப்பியம் எழுத்ததிகாரம் இளம் பூரணமும்
நச்சினார்க்கினியமும் சொல்லதிகாரம் சேனா வரையமும் அச்சிடப்
பெற்றிருந்தன. அவற்றை நான் படித்திருந்தமையால் சிந்தாமணி உரையிலுள்ள
எழுத்திலக்கணச் சொல்லிலக்கணச் செய்திகள் எனக்கு விளங்கின. உரையில்,
‘மூவா முதலா வுலகம்மொரு மூன்றும்’ என்பதற்கு, ‘அந்தமும் ஆதியுமில்லாத
மூவுலகமும்’ என்று எழுதியிருந்தது. உலகம் நிலை