பக்கம் எண் :

ஜைன நண்பர்கள் 539

னேன். தெளிவாக பதில் கிடைத்தது. சிந்தாமணியைப் படிப்பதற்கு ஒரு
தக்க துணை அகப்பட்டதென்ற நம்பிக்கை உண்டாயிற்று. சந்திரநாத
செட்டியாரும் சில விஷயங்களை விளக்கினார். கதையையும் எடுத்துச்
சொன்னார்.

விளங்கிய விஷயங்கள்

அன்று முதல் சந்திரநாத செட்டியார் எனக்கு நல்ல நண்பராகி விட்டார்.
ஜைனர்கள் சீவகசிந்தாமணியைச் சிறந்த பாராயண நூலாகக்
கருதுகிறார்களென்பதும், நம்மவர்கள் இராமாயண முதலியவற்றைப் பாராயணம்
செய்து பட்டாபிஷேகம் செய்வது போல அவர்களும் அந்த நூல்
நிறைவேறியவுடன் அந்த நிறைவேற்றத்தைக் கொண்டாடுவார்களென்பதும்
எனக்குத் தெரியவந்தன. சம்பிரதாயமாகப் படித்தவர்களிடையே சிந்தாமணிக்கு
ஓர் உரைவாய் மூலமாக வழங்கி வந்தது. அதை அவர்கள் சொல்லுவார்கள்.
மணிப்பிரவாள நடையில் மத சம்பந்தமான பரிபாஷைகள் மிகுதியாகக் கலக்கப்
பெற்று விளங்குவது அவ்வுரை. அதன் பகுதிகளை அவ்வப்போது சந்திரநாத
செட்டியார் சொல்ல நான் கேட்டு இன்புற்றேன்.

சிந்தாமணி உரையில் அங்கங்கே, நச்சினார்க்கினியர் அந்நூற்
செய்யுட்பகுதிகளை மேற்கோளாகக் காட்டியிருக்கிறார். நூல் முழுவதும்
நன்றாகப் படித்து மனனஞ் செய்தாலன்றி அச்செய்யுட்கள் இன்ன இடத்தில்
இருக்கின்றன வென்பது விளங்காது. அந்தச் செய்யுட் பகுதிகளைச் சந்திரநாத
செட்டியாரிடம் சொல்வேன்; அவர் பளிச்சுப் பளிச்சென்று இன்ன
இடத்திலிருக்கின்றனவென்று சொல்லி முழுப் பாட்டையும் சொல்வார்.
சிந்தாமணி விஷயத்தில் அவர் ஓர் அகராதியாக இருந்தார்.

சிந்தாமணி சம்பூரண உத்ஸவம் முடிந்த பிறகும் அப்பாசாமி நயினார்
சில காலம் கும்பகோணத்தில் தங்கியிருந்தார். பிறகு தம் ஊர் சென்றார்.
இடையிடையே கும்பகோணம் வந்து செல்வார். அவர் வந்த
காலங்களிலெல்லாம் ஜைன சம்பிரதாயங்களையும் ஜைன சமயக்
கருத்துக்களையும் விளக்கமாகத் தெரிந்து கொள்வேன்.

ஜைன அன்பர்களுடைய பழக்கத்தால் ஏட்டுப் பிரதிகள் இரண்டு
வகையாக இருந்ததற்குக் காரணம் தெரிந்து கொண்டேன். நச்சினார்க்கினியர்
முதலில் சிந்தாமணிக்கு ஓர் உரை எழுதினாராம். பிறகு அதை ஜைனர்களிடம்
படித்துக் காட்டிய போது சம்பிரதாய விரோதமாகச் சில பகுதிகள்
உள்ளனவென்று