பக்கம் எண் :

542என் சரித்திரம்

சிந்தாமணிப் பாட்டாக இருந்தால் சந்திரநாத செட்டியார் இருக்கிறார்.
வேறு நூலாக இருந்தால் என்ன செய்வது! அவர் மேற் கோளாகக் காட்டும்
உதாரணங்களோ நான் படித்த நூல்களிலே இல்லாதன. அவர் உதாரணங்கள்
காட்டு அந்த நூல்களின் தொகுதியே ஒரு தனி உலகமாக இருக்குமோ என்ற
மலைப்பு எனக்குத் தோற்றியது. “நூற்பெயரையாவது இந்த மனிதர் சொல்லித்
தொலைக்கக் கூடாதா?” என்று அடிக்கடி வருத்தம் உண்டாகும். ஆனாலும்
அந்த மகோபகாரியின் அரிய உரைத் திறத்தின் பெருமையை நான்
மறக்கவில்லை. சுருக்கமாக விஷயத்தை விளக்கி விட்டு எது நுணுக்கமான
விஷயமோ அதற்கு அழகாகக் குறிப்பு எழுதுகிறார். அவர் எழுதும்
பதசாரங்கள் மிக்க சுவையுடையன. அவர் அறிந்த நூல்களின் பரப்பு ஒரு
பெருங்கடலென்றே சொல்ல வேண்டும். இவ்வளவு சிறப்புக்களுக்கிடையே முன்
சொன்ன இரண்டு குறைபாடுகளும் மறைந்து விடுகின்றன.

சிந்தாமணி நயம்

இராமசுவாமி முதலியாருக்குப் பாடம் சொல்லுவதாக ஆரம்பித்த
சிந்தாமணி ஆராய்ச்சி வரவர எனக்கு இன்பந் தரும் ஒரு பொழுதுபோக்காகி
விட்டது. காலேஜிலும் வீட்டிலும் பாடம் சொல்லும் நேரம் போகச்
சிந்தாமணியைப் படிப்பதிலே ஆழ்ந்திருந்தேன். அனபாய சோழ மகாராஜா
சீவகசிந்தாமணியைப் படித்து அதன் நயத்திலே ஈடுபட்டிருந்தாரென்றும்,
அப்போது சேக்கிழார் ஜைனர்கள் கட்டிய கதை அந்நூல் என்று
சொன்னாரென்றும், நான் வாசித்திருந்தேன். அந்தச் சோழ சக்கரவர்த்தியின்
உள்ளத்தைப் பிணிக்கும் காவியரஸம் அந்த அரிய நூலில் இருப்பது உண்மை
யென்றே நான் உணர்ந்தேன். அது ‘பொய்யே கட்டி நடத்திய சிந்தாமணி’
யானால் நமக்கென்ன? நாம் வேண்டுவன சொற்சுவையும் பொருட்சுவையும்
தமிழ் நயமுமே; அவை நிரம்பக் கிடைக்கும் காவியமாக இருக்கும்போது
அதைப் படித்து இன்புறுவதில் என்ன தடை?

நான் கொடுத்த வாக்கு

சிந்தாமணிப் பாடத்தில் காந்தருவதத்தையாரிலம்பகத்தில் பாதி
நடந்திருந்தது. அக்காலத்தில் முதலியார் தம் வேலையை ராஜினாமாச் செய்து
விட்டு ஒரு கட்டுப்பாடுமின்றி வாழவேண்டுமென்றும் சென்னைக்குச் சென்று
வக்கீலாக இருக்கலாமென்றும் எண்ணிக் குடும்பத்துடன் புறப்பட்டார்.
புறப்படுங்காலத்தில் என்