பக்கம் எண் :

சிந்தாமணி ஆராய்ச்சி 557

காணப்பட்டன. அவற்றைக் கண்டபோது பெரிய புதையல் கிடைத்தது
போன்ற சந்தோஷம் எனக்கு உண்டாயிற்று. மேலும் படிக்கத் தொடங்கினேன்.

படித்தால் எளிதில் விளங்கக்கூடிய நூல்களாக அவை தோற்றவில்லை.
அவற்றில் உள்ளது வேறு ஒரு தனிப்பாஷை போலவே இருந்தது. ஆனாலும்
நான் விடவில்லை. படித்துப் பார்த்தேன். தொல்காப்பிய உரைகளில் வரும் பல
செய்யுட்கள் அவற்றில் இருந்தன. ‘இந்த நூல் தொகுதியே ஒரு தனிப்
பிரபஞ்சம்’ என்ற எண்ணம் எனக்கு வரவர வலிவடைந்தது.

அகநானூற்றைப் படித்து அதில் உள்ள செய்யுட்களுக்கு இலக்கமிட்டு
அவற்றிலுள்ள அரும்பதங்களையும் தொடர்களையும் தொகுத்து அகராதி
வரிசையில் எழுதி வைத்துக் கொண்டேன். நச்சினார்க்கினியர் எங்கெங்கே
‘என்றார் பிறரும்’ என்று எழுதுகின்றாரோ அங்குள்ள மேற்கோட்
பகுதிகளிலுள்ள பதங்களையும் தொடர்களையும் அந்த அகராதியிலே
பார்ப்பேன். ஒன்று இரண்டு கிடைக்கும். அந்தப் பாட்டை எடுத்துப்
பார்ப்பேன். சிந்தாமணியில் நச்சினார்க்கினியர் எழுதியிருக்கும் உரையால்
அந்தச் செய்யுள் ஒருவாறு விளங்கும். அதிலே ஈடுபட்டு ஒரு முறை இரண்டு
முறை மூன்று முறை படித்துப் பார்ப்பேன். சங்க நூல்களாகிய புதிய உலகத்தின்
காட்சிகள் பனிமூடிய மலைபோல என் கண்ணுக்குத் தோற்றலாயின.
பனிப்படலம் படர்ந்திருந்தாலும் மலையினுடைய உயரமும் பருமையும்
கண்ணுக்குப் புலப்படுதல் போலத் தெளிவாக விளங்காவிட்டாலும் அந்தச் சங்க
நூற் செய்யுட்கள் பொருளமைதியால், ‘நிலத்தினும் பெரியனவாகவும், வானிலும்
உயர்ந்தனவாகவும், கடல் நீரினும் ஆழமுடையனவாகவும்’ தோற்றின.
சிந்தாமணி உரையில், ‘என்றார் அகத்திலும்’ என்று முற்பகுதியில் வருகிறது.
அங்கே உள்ள செய்யுட்பகுதி அகநானூற்றில் இருந்தது.

இப்படி ஆராய்ந்த போது எல்லாவற்றையும் ஒரு வகையாகத் தெரிந்து
கொண்ட பிறகே சிந்தாமணியை அச்சிடத் தொடங்க வேண்டுமென்ற எண்ணம்
உண்டாயிற்று. சிந்தாமணியைப் பல முறை திரும்பத் திரும்பப் படித்தேன்; மற்ற
நூல்களை இடையிடையே படித்துக் குறிப்பெடுத்தேன்.

தஞ்சைப் பிரதி

சிந்தாமணி ஏட்டுப் பிரதிகள் வேறு கிடைக்குமாவென்று எனக்குத்
தெரிந்தவர்களையெல்லாம் விசாரித்துக்கொண்டேயிருந்தேன். சந்தேகமான
இடங்கள் பல இருந்தமையால் நல்ல பாட