பக்கம் எண் :

சிந்தாமணி ஆராய்ச்சி 559

“ஏதடா விபரீதமாகப் போய் விட்டது!” என்று என் நண்பர் தம்மைத்
தாமே நொந்து கொண்டார்.

மறுபடியும் வருவதாகச் சொல்லிவிட்டுத் தஞ்சையில் யாரைக் கொண்டு
முயன்றால் முதலியாரின் பிரதியைப் பெறலாமென்று விசாரித்தேன். கடைசியில்
துக்காராம் ஹோல்கார் என்னும் மகாராஷ்டிர தனவானாகிய என் நண்பரை
அழைத்துக் கொண்டு மீட்டும் விருஷபதாச முதலியாரை அணுகினேன். நல்ல
வேளையாக அவர் மனம் இளகியது. தம்மிடமிருந்த பிரதியை உதவினார்.
இவ்வளவு நயந்து வாங்கிய அப்பிரதி சிறந்த பிரதியன்று; விசேஷ
உரையில்லாதது.

மயக்கம் தந்த விஷயங்கள்

இவ்வாறு பல வகையில் முயன்று தேடியதில் சிந்தாமணிப் பிரதிகள் 23
கிடைத்தன. அவற்றையெல்லாம் வைத்துக்கொண்டு பார்க்கலானேன். பார்க்கப்
பார்க்கப் பல விஷயங்கள் தெளிவாயின. ஆனால் பாடபேதக் கடலுக்குக்
கரைகாணவே முடியவில்லை. மனம் போன போக்கிலே எழுதிய
கனவான்களால் விளைந்த விபரீதம் எவ்வளவோ ஏட்டில் உண்டு.

இது கொம்பு, இது சுழி என்று வேறு பிரித்து அறிய முடியாது
மெய்யெழுத்துக்களுக்குப் புள்ளியே யிராது. ரகரத்துக்கும் காலுக்கும் வேற்றுமை
தெரியாது. சரபம் சாபமாகத் தோற்றும், சாபம் சரபமாகத் தோற்றும். ஓரிடத்தில்
சரடு என்று வந்திருந்த வார்த்தையை நான் சாடு என்றே பலகாலம்
எண்ணியிருந்தேன், தரனென்பதைத் தானென்று நினைத்தேன். ‘யானை
நாகத்திற்றோற்றுதலின்’ என்று ஓரிடத்தில் இருந்தது. யோசித்து யோசித்துப்
பார்த்தேன். யானைகளில் வனசரம், நதிசரம் கிரிசரம் என்று மூன்று
வகையுண்டென்று கேட்டிருக்கிறேன். நாகமென்பது மலையாக இருக்குமென்றும்
கிரிசரமாகிய யானையைக் குறித்ததாகக் கொள்ளலாமென்றும் தோற்றியது. ஒரு
நண்பர், “ஜைன சம்பிரதாயத்தில் நாகத்தின் வயிற்றில் யானை முதலில்
பிறந்ததென்று இருக்கலாமோ என்னவோ!” என்று ஒரு சந்தேகத்தைக்
கிளப்பினார். “அது நாகத்தில் பிறந்ததோ, அல்லது நரகத்திற் பிறந்ததோ,
ஒன்றும் விளங்கவில்லையே!” என்று சொல்லிச் சிரித்தேன்.

“யானை நரகத்தில் தோற்றுதலின் அதற்கு வணங்குதல் இயல்பு” என்று
நச்சினார்க்கினியர் எழுதுகிறார். காந்தருவதத்தையோடு இசை பாடித்
தோல்வியுற்றவர்களை நோக்கி,