பக்கம் எண் :

மூன்று லாபங்கள் 561

சந்தர்ப்பங்கள் பல. நச்சினார்க்கினியருடைய அன்வயத்திலே வரும்
பாடற் பகுதிகளைத் தேடிக் கண்டுபிடிக்க முடியாமல் மயங்கிய சமயங்கள் பல.
ஓர் ஏட்டுக்கும் மற்றோர் ஏட்டுக்கும் இடையே உள்ள பாட பேதங்களால்
அடைந்த கலக்கத்திலிருந்து மீள வழியின்றி மயங்கிய நிகழ்ச்சிகள் பல.
உரைக்கு மூலமும் மூலத்துக்கு உரையும் கிடைக்காமல் பலமுறை
இடர்ப்பட்டேன். மேற்கோள் எதற்காக உரையாசிரியர் காட்டுகிறாரென்பது
விளங்காமல் பல தடவை தயங்கினேன். ஜைன விஷயங்களில் நுணுக்கமான
சில செய்திகள் விளங்காமையால் மேலே வாசிக்க முடியாமல் பலகாலம்
தடுமாறி நின்றேன். இலக்கணச் செய்திகளை அமைத்துக்கொள்ள வகை
தெரியாமல் பலவாறு யோசித்துப் பல சமயங்களில் குழம்பினேன்.

இப்படிச் சிந்தாமணி யென்னும் காவியச்சோலையில் நான் சஞ்சாரம்
செய்கையில் நேர்ந்த கலக்கங்களும் இடர்ப்பாடுகளும் தடைகளும்
மயக்கங்களும் நாளடைவில் இறைவனருளால் சிறிது சிறிதாகத் தெளியலாயின.
பதிப்பிக்கலாமென்ற எனது சங்கற்பம் நிறைவேறுமென்னும் நம்பிக்கை
உறுதியாயிற்று.

அத்தியாயம்-93

மூன்று லாபங்கள்

கும்பகோணம் காலேஜில் உள்ள ஆசிரியர்களும் மாணாக்கர்களும்
என்பால் வைத்திருந்த பேரன்பினால் என் வேலையைச் சிரமமின்றி நான்
திருப்தியுடன் பார்த்து வந்தேன். இடையிடையே திருவாவடுதுறைக்குச்
சென்றமையால் அவ்வாதீனச் சம்பந்தமும் எனக்கு ஊக்கத்தை உண்டாக்கிற்று.அடிக்கடி தியாகராச செட்டியார், சேலம் இராமசுவாமி முதலியார்
முதலிய அன்பர்கள் எனக்குக் கடிதம் எழுதுவார்கள். அவர்களுடைய
கடிதங்கள் நேரில் பழகிப் பேசுவதைப் போன்ற இன்பத்தை உண்டாக்கும்.

மீட்ட நிலம்

முன்னமே தெரிவித்தபடி குடும்ப விஷயத்தில் எனக்கு எவ்வகைக்
கவலையுமில்லாமல் என் தந்தையாரே கவனித்து வந்தார். குடும்பப்
பாதுகாப்பில் அவரைப் போன்ற கருத்தும் ஒழுங்கும் உடையவர்கள் மிகச்
சிலரே. அவர் மிகவும் செட்டாகச்