பக்கம் எண் :

58என் சரித்திரம்

தியாயர்கள் சிரமப்படுவார்கள். ஒரு மனிதன் தன் வாழ்க்கைக்கு
அடிப்படையான விஷயங்களை இளமையில் பள்ளிக்கூட வாழ்வில் மனப்
பாடமாகத் தெரிந்து கொள்வான். எண்சுவடியிலுள்ள கீழ்வாயிலக்கம்,
மேல்வாயிலக்கம் குழிமாற்று, நெல் இலக்கம் முதலிய வாய்ப்பாடுகள் பெரிய
வியாபாரிகள் தங்கள் வியாபாரத்தை நடத்துவதற்கும், ஜனங்கள் பெரிய
உத்தியோகங்களை வகிப்பதற்கும் உரிய வழியைப் புலப்படுத்தின. எல்லாம்
பெரும்பாலும் மனக் கணக்காகவே இருக்கும். அக்காலத்தில் பள்ளிக்கூடத்தில்
பிரபவாச் சுவடி (பிரபவாதிச் சுவடி) என்ற ஒரு புஸ்தகம் பாடமாக இருந்தது.
அதில் வருஷங்கள், மாதங்கள், நட்சத்திரங்கள், யோகம், கரணம், ராகு காலம்,
குளிகை காலம், யமகண்டம் முதலிய சோதிட விஷயங்களும், லோகங்கள்,
சக்கரவர்த்திகள், மன்வந்தரம், தீவுகள் முதலிய பல விஷயங்களும் இருக்கும்.
அவற்றை நன்றாக மனப்பாடம் பண்ணிக் கொண்ட மாணாக்கன் பிறகு பல
சந்தேகங்களை ஆசிரியரின்றியே தெரிந்து கொள்ளும் சக்தியைப் பெறுவான்.

பண்டிகை நாட்களில் பிள்ளைகள் யாவரும் ஒன்றாகச் சேர்ந்து
கோயிலுக்குச் செல்வார்கள். ஆடி மாதம் பதினெட்டாந் தேதியில் பழஞ்
சுவடிகளை எல்லாம் சேர்த்து அழகான ஒரு சப்பரத்தில் வைத்து மேள
தாளத்துடன் இழுத்துச் சென்று ஆற்றிலோ குளத்திலோ விடுவார்கள்.
பிள்ளையார் சதுர்த்தியன்று ஏழு பிள்ளையாரைத் தரிசிக்க வேண்டுமென்பது
ஒரு சம்பிரதாயம். ஸ்ரீ ஜயந்தியிலும் சிவராத்திரியிலும் பிள்ளைகள் சேர்ந்து
பாடிச் சென்று வீடு தோறும் எண்ணெய் தண்டி இரவில் கண் விழித்துப் பாடிக்
கொண்டும் கதை சொல்லிக் கொண்டும் வேடிக்கையாகப் பொழுது
போக்குவார்கள்.

அத்தியாயம்-11

விளையாட்டும் வித்தையும்

விடுமுறை நாட்களில் நான் உடன்படிக்கும், பிள்ளைகளோடு
விளையாடுவது வழக்கம். ஆயினும், என் தந்தையார் காணாமல்
விளையாடுவேன். கண்டால் அடித்து விடுவாரென்ற பயம் இருந்தது. நான்
பள்ளிக்கூடத்தில் படிப்பதோடு வீட்டிலும் எப்போதும் படிக்க வேண்டுமென்பது
அவரது நினைவு.

என் சிறிய தகப்பனார் எனக்கு வீட்டில் பாடம் சொல்லித் தந்தார். அவர்
நயமாகக் கற்பிப்பார். என் பாட்டனாரும் கற்