பக்கம் எண் :

588என் சரித்திரம்

அங்கே எனக்காக விடப்பட்ட அறையில் வேண்டிய சாமான்களை
வைத்திருந்தேன். புறத்தே உள்ள தாழ்வாரத்தில் ஒரு விசுப்பலகை இருக்கும்.
அதில்தான் ஒவ்வொரு நாளும் படுத்துக் கொள்வேன். அவ்விடத்திற்கு நேர்
மேலே ஒரு கண்ணாடி விளக்கு போடப் பட்டிருக்கும். இரவு நேரத்தில் அந்த
விளக்கு வெளிச்சத்தில் அச்சுக் கடிதங்களைத் திருத்துவேன் தனியாக இருந்து
கையெழுத்துப் பிரதியையும் ‘காலி புரூப்’ முதலியவற்றையும் நானே ஒப்பு
நோக்குவேன். பிறகு ஒரு முறை கூர்ந்து படித்துத் திருத்தங்கள் செய்வேன்.
பார்க்கிற வரையில் பார்த்து விட்டு அயர்ச்சி ஏற்பட்டால் அப்படியே படுத்துக்
கொள்வேன். இரண்டு மணிக்குத் திடீரென்று விழித்துக் கொண்டு மறுபடியும்
விடியும் வரையில் ‘புரூப்’ பார்ப்பேன்.

அந்தத் தனிமையில் எனக்குத் துணை செய்வார் ஒருவரும் இல்லை.
சற்றுத் தூரத்துக்கப்பால் பங்களாவுக்குக் காவலாக ஒரு நாய்
கட்டப்பட்டிருக்கும். இரண்டு கூர்க்கச் சிப்பாய்கள் தூங்காமல் காவல்
புரிவார்கள். அவர்களால் எனக்கு என்ன உதவி செய்ய முடியும்? ‘இந்த
இரவில் இப்படி உட்கார்ந்து கொண்டு பார்க்கிறாரே’ என்று அவர்கள்
ஆச்சரியப்பட்டிருக்கக் கூடும்.

பூண்டி அரங்கநாத முதலியார்

இப்படி இருக்கையில் வெளியூர் சென்றிருந்த சேலம் இராமசுவாமி
முதலியார் திரும்பி வந்தார். சிந்தாமணியில் பதிப்பித்திருந்த பகுதிகளைக்
கண்டு அவர் அடைந்த மகிழ்ச்சிக்கு எல்லையில்லை. அவர் என்னை
அழைத்துச் சென்று சில கனவான்களுடைய பழக்கத்தைச் செய்வித்தார், ஒரு
நாள் காஸ்மொபாலிடன் கிளப்புக்குப் போனோம். அப்போது அங்கே பூண்டி
அரங்கநாத முதலியார் ‘பில்லியர்ட்ஸ்’ விளையாடிக் கொண்டிருந்தார்.
விளையாடியபடியே அவர் என்னோடு பேசினார். நான் சொல்லிய தமிழ்ப்
பாடல்களைக் கேட்டு உவந்தார். அவரும் சில பாடல்களைச் சொன்னார்.
மற்றொரு நாள் சிந்தாமணிக்கு அவரிடம் கையொப்பம் வாங்கலாமென்ற
எண்ணத்தோடு அவர் வீட்டிற்குச் சென்றேன். அப்போது

கட்டளைக் கலித்துறை

“நந்தாத வான்பொ ருளைப்புல வோர்க்கு நயந்தளிக்கும்
சிந்தா மணியைப் பலரு மெளிதுறச் செய்திடுவாய்
மந்தாரத் தோடெழிற் சந்தானம் போலிரு வான்பொருளை
வந்தார்க் களித்திடு மால்ரங்க நாத மகிபதியே”