பக்கம் எண் :

594என் சரித்திரம்

வருகிறாரென்று ஒரு விளம்பரம் வந்ததாகக் கேள்வியுற்றேன்.
தங்கசாலைத் தெருவில் உள்ள ஸ்ரீ ஆறுமுக நாவலரது வித்தியாநுபாலன
அச்சியந்திர சாலையில் நாவலர் பதிப்புக்களைக் கவனித்து வந்த யாழ்ப்பாணம்
சதாசிவ பிள்ளை என்பரிடம் போய் விசாரித்தேன். அவர், “நாவலரையாவின்
மருகராகிய பொன்னம்பலம் பிள்ளையும் சீவகசிந்தாமணியைப் பதிப்பித்து
வருகிறாராம். இருபது பாரம் பதிப்பித்தாயினவாம். இதோ பாருங்கள்: இந்தப்
பத்திரிகையில் அறிவிப்பு” என்று அந்தப் பத்திரிகையையும் காட்டி, “ஒரே
நூலை இருவர் பதிப்பிப்பதில் என்ன லாபம்!” என்றும் சொன்னார். “அதனால்
என்ன?” என்று சொல்லி நான் வந்து விட்டேன். அது முதல் சிந்தாமணிப்
பதிப்பைப் பின்னும் செவ்வையாக நடத்த வேண்டுமென்று எண்ணி உழைத்து
வந்தேன். கிறிஸ்டியன் காலேஜில் தமிழ்ப் பண்டிதராக இருந்து வந்த
சுப்பராயலு நாயகரென்பர் புரூப் பார்த்து எனக்கு உதவி செய்து வந்தார்.

கும்பகோணம் காலேஜில் இருந்த ஸ்ரீ ஆர்.வி.ஸ்ரீனிவாசையர் சென்னை
ரெவின்யூ போர்டு ஆபீஸில் தக்க உத்தியோகம் பெற்று அப்போது
சென்னையில் இருந்தார். நான் அவர் வீட்டுக்குச் சென்று சில நாள்
தங்குவேன். அவர் என் பதிப்பு முயற்சிகளைக் கேள்வியுற்று மகிழ்ந்து ஊக்க
மூட்டுவார். பூண்டி அரங்கநாத முதலியாரையும் பார்த்து வருவேன். சேலம்
இராமசுவாமி முதலியாரை ஒவ்வொரு நாளும் கண்டு சல்லாபம் செய்து
மகிழ்வேன்.

கிராமவாசியின் தமிழன்பு

ஒருநாள் அச்சுக்கூடத்தில் புரூப் பார்த்துக்கொண்டிருந்தேன். ஒருவரும்
வராமையால் நானே தனியே இருந்து வாய் விட்டுப் படித்து வந்தேன்.
கிறிஸ்துமஸ் சமயமாதலால் சென்னைக்கு வெளியூரிலிருந்து பலர் வேடிக்கை
பார்க்க வந்த ஜனங்கள் கூட்டம் கூட்டமாய்த் தெருவில் போய்க்
கொண்டிருந்தனர். நான் தெருவை நோக்கியிருந்த ஜன்னலுக்கருகே உட்கார்ந்து
படித்துக் கொண்டிருந்தேன். அப்போது யாரோ மெல்ல ஜன்னலண்டை வந்து
ஓரமாக நின்றார். நான் அவரைக் கவனிக்கவில்லை. நான் படிக்கப் படிக்க
அவர் நின்று கேட்டுக் கொண்டிருந்தார். அவரை நிமிர்ந்து பார்த்தேன்.
அவருடைய சாதாரணமான தோற்றத்திலிருந்து அவரை ஒரு கிராமவாசி என்று
தெரிந்து கொண்டேன். கிறிஸ்துமஸ் வேடிக்கை பார்க்க வந்த அவர் நான்
படித்ததைக் கேட்டார். அந்தத் தமிழ் அவரை இழுத்தது. அதனாலே தான்
அங்கே வந்து நின்று கவனித்தார். அவர் பேசாமல் நின்று கொண்டிருந்ததைப்
பார்த்து நான், “எங்கே வந்தீர்கள்?” என்று கேட்டேன்.