பக்கம் எண் :

புதிய ஊக்கம் 597

செய்யக் கூடாதென்று சொல்லவே சேஷையருக்கு மிக்க கோபம் வந்து
விட்டது. “என்ன ஐயா வழக்கம்! ஆபத்துக் காலங்களில் விதி விலக்கு
இல்லையா? எல்லோரும் எப்போது தபால் வருமென்று கவலையோடு ராத்திரி
முழுவதும் தூங்காமல் காத்திருக்கிறார்கள். நீர் ரூல் பேசுகிறீரே! நீர் இப்போது
இந்தக் கட்டை உடைத்துக் கடிதங்களை அவரவர்களுக்குக் கொடாவிட்டால்
நான் மேலதிகாரிக்கு எழுதுவேன்” என்று கண்டிப்பாகச் சொன்னார். மிக்க
செல்வாக்குள்ள அவர் சொல்லவே, போஸ்டு மாஸ்டர் தபாற் கட்டைப்
பிரித்தார். என் தகப்பனார் விலாசத்துக்கு வந்த கார்டை வாங்கி உடனிருந்த
என் தகப்பனாருக்குக் காட்டினார். வேறு பலரும் தங்களுக்கு வந்த
கடிதங்களைப் பெற்றுச் சென்றனர். என் கார்டைப் பார்த்த பிறகே என்
தந்தையாருக்கு உயிர் வந்தது.

அத்தியாயம்- 98

புதிய ஊக்கம்

கிறிஸ்துமஸ் விடுமுறையில் சென்னைக்குச் சென்று சிந்தாமணிப்
பதிப்பை நடத்தி வந்தபோது ஒருநாள் தனியே ‘புரூப்’ பார்த்து விட்டு
மாலையில் அச்சுக்கூடத்தின் வெளிப்புறத்தில் உள்ள குறட்டில் மிக்க
தளர்ச்சியோடு உலாவிக் கொண்டிருந்தேன்.

‘கிருஷ்ண தரிசனம்’

அப்போது கருடத்வனி கேட்டது. மேலே பார்த்தேன். ஒரு கருடப்
பறவை வட்டமிட்டுக் கொண்டிருந்தது. அதைத் தரிசனம் செய்து என்
பார்வையைக் கீழே செலுத்தினேன். எதிரே திருமானூர் அ.கிருஷ்ணையர் வந்து
நின்றார். நான் ஆச்சரியத்தால் ஒன்றுந் தோன்றாமல் நின்றேன். “ஐயா,
ஆகாயத்திலும் கிருஷ்ணதரிசனம், பூமியிலும் கிருஷ்ண தரிசனம்” என்று
மகிழ்ச்சியுடன் சொல்லிவிட்டு, “என்ன விசேஷம்? விடுமுறை முடியும் காலத்தில்
இங்கே வந்தீர்களே!” என்று வினாவினேன்.

“வேலூர் மஹந்து பள்ளிக்கூட வேலையிலிருந்து இப்போது நீங்கி
விட்டேன். தாங்கள் இவ்வூருக்கு வந்திருப்பது தெரிந்தது. அதனால் இங்கு
வந்தேன்: தங்களைக் கண்டு இனி நான் செய்ய வேண்டியது இன்னதென்று
தெரிந்து அந்தப்படி நடக்கலாமென்று வந்திருக்கிறேன்” என்றார்.