பக்கம் எண் :

மகிழ்ச்சியும் வருத்தமும் 607

தாமோதரம் பிள்ளையின் கடிதங்கள்

புதுக்கோட்டையிலிருந்த சி. வை. தாமோதரம் பிள்ளையும் பல முறை
கடிதங்கள் எழுதினார். அவர் அப்போது கலித்தொகையை உரையுடன்
பதிப்பித்து வந்தார். அதை முற்றும் ‘புரூப்’ பார்த்துத் தர வேண்டுமென்று
எனக்கு எழுதினார்.

“சிந்தாமணிப் பதிப்பு வேலையில் என் கவனம் முற்றும் இருப்பதால்
மற்றவற்றை இப்போது கவனிக்க இயலவில்லை” என்று அவருக்குப் பதில்
எழுதினேன். ஆனாலும் அவர் விடாமல் கடிதம் எழுதிக் கொண்டும்
கலித்தொகையின் புரூப்களை அனுப்பிக் கொண்டும் வந்தார். தளர்ச்சி
யில்லாமல் அவர் செய்த முயற்சிகளால் நான் ஈடுபட்டு அவ்வப்போது சில சில
பகுதிகளை மட்டும் பார்த்து எனக்குத் தோற்றிய திருத்தங்களை
எழுதியனுப்பினேன். அவற்றை அவர் மகிழ்ச்சியோடு ஏற்றுக்கொண்டார்
அந்தக் கலித்தொகைப் பதிப்பிலிருந்து சிந்தாமணியில் வந்துள்ள
மேற்கோள்கள் சிலவற்றைத் தெரிந்து கொண்டேன். அவர் பதிப்பித்து வந்த
இலக்கண விளக்கத்தைப் பற்றியும், தொல்காப்பியத்தைப் பற்றியும்
அவ்வப்போது எழுதுவார். அதனால் பழைய தமிழ் நூல்கள் வெளிவர
வேண்டுமென்பதில் அவருக்கிருந்த பேரூக்கத்தை நான் உணர்ந்து
கொண்டேன். சிந்தாமணியில் இன்ன இன்ன பாகம் நடக்கிறதென்றும் நான் என்
விடைக் கடிதங்களில் தெரிவிப்பேன்.

கடன் வாங்கியது

சிந்தாமணிப் பதிப்பில் அச்சுக்கூலி, காகித விலை முதலியவற்றிற்கு
எனக்குப் போதிய பணம் கிடைக்கவில்லை. பலர் முன் பணம் கொடுப்பதாகக்
கையொப்பமிட்டிருந்தாலும் சிலரே பணம் அனுப்பினர். இந்த நிலையில் அச்சுக்
கூலிக்கும், காகித விலைக்கும் பணம் அனுப்ப வேண்டுமென்று
சென்னையிலிருந்து கடிதம் வரும் போது அதனைத் தொகுத்து அனுப்புவதில்
மிக்க கஷ்டத்தை அடைந்தேன். நூறும் ஐம்பதுமாக அனுப்பி வருவேன்.
கையொப்பமிட்ட கனவான்களுக்கு நான் கடிதம் எழுதினேன். சிலர் உடனே
பணமனுப்பி உதவினார்கள்.

ஒரு சமயம் சில பாரங்கள் அச்சிடுவதற்குக் காகிதம் தேவையாக
இருந்தது. அச்சுக்கூடத் தலைவர் காகிதத்துக்குப் பணம் அனுப்ப
வேண்டுமென்று எழுதிவிட்டார். கையிலோ பணமில்லை, இன்னது
செய்வதென்று தெரியவில்லை. நான் சிரமப்படுவதை அறிந்து தாமோதரம்
பிள்ளை தமக்குத் தெரிந்த காகிதக் கடைக்காரர் ஷண்முகஞ் செட்டியார்
என்பவரிடம் காகிதம் வாங்கிக்