பக்கம் எண் :

சிந்தாமணி வெளியானது 611

பதிப்பிக்கும்படி என்னைத் தூண்டியதையும், பிரதி அளித்ததையும்,
வேற பல பிரதிகள் கிடைத்ததையும் குறிப்பித்தேன்.

பட்ட கஷ்டங்கள்

அப்பிரதிகளை ஆராய்ந்த போது நான் பட்ட கஷ்டங்களைச்
சுருக்கமாக அதில் தெரிவித்தேன்:

எழுத்தும் சொல்லும் மிகுந்தும் குறைந்தும் பிறழ்ந்தும் திரிந்தும்
பலவாறு வேறுபட்டுக் கிலமுற்றிருந்த இந்நூலுரைப் பழைய பிரதிகள்
பலவற்றையும் பலகால் ஒப்புநோக்கி இடையறாது பரிசோதனை செய்து வந்த
பொழுது, கவிகளின் சுத்த வடிவத்தையும் உரையின் சுத்த வடிவத்தையும் கண்டு
பிடித்ததற்கும், உரையினுள் விசேடவுரை இன்னது பொழிப்புரை இன்னது என்று
பிரித்தறிதற்கும், மேற்கோள்களின் முதலிறுதிகளைத் தெரிந்து கோடற்கும்,
பொழிப்புரையை மூலத்தோடு இயைத்துப் பார்த்தற்கும், பிழையைப்
பிழையென்று நிச்சயித்துப் பரிகரித்தற்கும், பொருள் கோடற்கும்
எடுத்துக்கொண்ட முயற்சியும், அடைந்த வருத்தமும் பல. அப்படி அடைந்தும்
சில விடத்துள்ள இசைத் தமிழ் நாடகத் தமிழின் பாகுபாடுகளும், மற்றுஞ் சில
பாகமும் நன்றாக விளங்கவில்லை. அதற்குக் காரணம் அவ்விசைத் தமிழ்
நாடகத் தமிழ் நூல் முதலியவைகள் இக் காலத்துக் கிடையாமையே!”

என் கொள்கை

ஏட்டுச் சுவடிகளிற் கண்ட பாடங்களின் வேறுபாட்டைக் கண்டு கண்டு
என் மனம் புண்ணாகியிருந்தது. இன்னபடி இருந்தால் பொருள் சிறக்குமென்று
எனக்குத் தோற்றின இடங்களிலும் பிரதியில் உள்ளதையே பதிப்பித்தேன்.
என்னுடைய கருத்தையோ, திருத்தத்தையோ சிந்தாமணியில் ஏற்றாமல் மிகவும்
ஜாக்கிரதையாகக் கவனித்துப் பதிப்பித்தேன். பதிப்பிக்கத் தொடங்கிய நூல்
எனக்கு ஒரு தெய்வ விக்கிரகம்போல இருந்தது. அதன் அழுக்கைத் துலக்கிக்
கவசமிட்டுத் தரிசிக்க வேண்டுமென்பதே என் ஆசை; ‘கை கோணி இருக்கிறது,
வேறுவிதமாக அமைக்கலாம்; நகத்தை மாத்திரம் சிறிது திருத்தலாம்’ என்ற
எண்ணம் எனக்கு உண்டாகவில்லை. அதன் ஒவ்வோரணுவிலும் தெய்விக
அம்சம் இருக்கிறதென்றே நம்பினேன். அழுக்கை நீக்கி விளக்குவதற்கும்,
அங்கத்தையே வேறுபடுத்துவதற்கும் உள்ள வித்தியாசத்தை நன்றாக
அறிந்திருந்தேன். இக்கருத்தை, ‘புராதனமான