பக்கம் எண் :

அன்பர்கள் கொண்ட மகிழ்ச்சி 615

அவரிடம் புஸ்தகத்தைக் காட்டினபோது அவர் அடைந்த ஆனந்தம்
இவ்வளவென்று சொல்லி முடியாது. “பெரிய காரியத்தை மேற்கொண்டு
நிறைவேற்றி விட்டீர்கள். இனி, சிலப்பதிகாரம் முதலியவற்றையும் இப்படியே
அச்சிட்டுப் பூர்த்தி செய்ய வேண்டும்” என்று சொன்னார்.

“எல்லாம் செய்யலாம், எல்லாவற்றிற்கும் பணம் வேண்டியிருக்கிறதே,
அதற்கு நான் எங்கே போவேன்! நேற்று நான் விசுவநாத சாஸ்திரிகளிடம்
முந்நூறு ரூபாய் கடன் வாங்கிச் சிந்தாமணிப் பிரதிகளை அச்சுக்கூடத்திலிருந்து
எடுத்துச் செல்ல வேண்டியிருந்தது” என்று முதல் நாள் நிகழ்ச்சிகளை
விரிவாகச் சொன்னேன்.

முதலியார் மிகவும் வருந்தி, “கையொப்பமிட்ட கனவான்களிடம்
கொடுக்க வேண்டிய பணத்தைக் கேட்டால் கொடுப்பார்கள். அதை வாங்கிக்
கடனுக்கு ஈடுசெய்து விடலாமே” என்றார்.

“நான் இன்றிரவே புறப்பட்டு நாளைப்பகலில் கும்பகோணம் காலேஜு
க்குப் போக வேண்டியவனாக இருக்கிறேன். இந்த அவசரத்தில் நான் யாரிடம்
போய்ப் பணம் கேட்பது?” என்றேன்.

“அப்படியானால் மற்ற நண்பர்களிடம் நான் கேட்டு வாங்கிச்
சாஸ்திரியாரிடம் கொடுத்து விடுகிறேன். அரங்கநாத முதலியாரை மாத்திரம்
நீங்களே போய்ப் பாருங்கள், அவர் கொடுக்க வேண்டிய பணத்தைத் தருவார்”
என்றார்.

‘அவர் இந்தப் புஸ்தகத்தைக் கண்டால் மிகவும் சந்தோஷமடைவார்;
நிச்சயமாகத் தாம் வாக்களித்தப்படி உதவி செய்வார்’ என்ற எண்ணத்தோடு
அரங்கநாத முதலியார் வீட்டை அடைந்தேன். அவர் தம்முடைய அறையில்
இருந்தார். அப்போது பிற்பகல் நான்கு மணியிருக்கும். என் வரவை அறிந்த
முதலியார், “நான் இப்போது பரீட்சைக்குரிய வேலையில் இருக்கிறேன்,
அவகாசம் சிறிதும் இல்லை. பார்க்க முடியாததற்கு வருந்துகிறேன். நாளைக்
காலையில் வந்தால் பார்த்துப் போகலாம்” என்று சொல்லியனுப்பினார். மிக்க
ஆவலோடு சென்ற நான் எதிர்பாராத வருத்தத்தை அடைந்தேன்.
‘அதிருஷ்டமும் துரதிருஷ்டமும் மனிதர்களுக்குச் சேர்ந்தே வருகின்றன,
என்றெண்ணி இராமசுவாமி முதலியாரிடம் விஷயத்தைத் தெரிவித்துவிட்டு
அன்றிரவே கும்பகோணத்துக்குப் புறப்பட்டேன்.