பக்கம் எண் :

620என் சரித்திரம்

வர்கள். அவர்களைப் பார்த்துத் தேசிகர், “பொன்னையா பிள்ளை
சிந்தாமணி பதிப்பிப்பதாக எழுதியிருந்தாரே; எந்த அளவில் இருக்கிறது?
முற்றுப் பெற்றதா?” என்று கேட்டார்.

“அந்த பிரஸ்தாவமே அங்கில்லை. இரகுவம்சம் மாத்திரம் அவரால்
அச்சிடப்பட்டு முடிந்தது. சந்நிதானத்தினிடம் ஒரு பிரதியையும் இவர்களிடம்
ஒரு பிரதியையும் ஒரு கடிதத்தையும் சேர்ப்பிக்கும்படி கொடுத்திருக்கிறார்”
என்று சொல்லி விட்டு இரகுவம்சத்தையும் கடிதத்தையும் என்னிடம்
கொடுத்தார்கள். அக்கடிதத்தில் பொன்னையா பிள்ளை, சிந்தாமணியைப்
பார்ப்பதில் மிக்க ஆவலுடையவராக இருப்பதாகவும் ஒரு பிரதி அனுப்ப
வேண்டுமென்றும் தெரிவித்திருந்தார்.

நான் தேசிகரோடு பேசியிருந்து விடை பெற்றுக் கும்பகோணம் வந்து
பொன்னையா பிள்ளைக்குச் சிந்தாமணிப் பிரதி ஒன்றும் ஒரு கடிதமும்
அனுப்பினேன். அக்கடிதத்தில், “பாற்கடலின் ஆழம் மந்தர மலைக்குத்
தெரியுமே யன்றி வேறு எந்த மலைக்கும் தெரியாது. அது போலச்
சீவகசிந்தாமணியின் ஆழம் உங்களுக்குத்தான் தெரியும். ஏதோ ஒருவாறு நான்
பதிப்பித்திருக்கிறேன். தாங்கள் அங்கீகரித்துக் கொள்ள வேண்டும்” என்று
எழுதினேன்.

பிறகு வெளியூரிலுள்ள கையொப்பக்காரர்களுக்குப் பிரதிகளை அனுப்பிக்
கடிதங்களும் எழுதினேன். பலர் என்னைப் பாராட்டி விடை எழுதினர். பலர்
பாடல்கள் அனுப்பினர். பலர் தாம் அளிப்பதாகச் சொன்ன பணத்தை
அனுப்பினர். தஞ்சாவூர், திருச்சிராப்பள்ளி என்னும் இரண்டு ஊர்களுக்கும்
நானே நேரில் சென்று கையொப்பமிட்ட அன்பர்களுக்குப் புத்தகம் கொடுக்க
எண்ணினேன்.

ஸ்ரீநிவாச பிள்ளை பாராட்டு

முதலில் தஞ்சாவூருக்குப் போய் அங்குள்ள என் அன்பரும்
வக்கீலுமாகிய ஸ்ரீநிவாச பிள்ளையையும், கல்யாண சுந்தர ஐயர்
முதலியவர்களையும் கண்டு பிரதிகளைச் சேர்ப்பித்தேன். ஸ்ரீநிவாஸ பிள்ளை
சிந்தாமணியைப் பார்த்தார். அதில் நச்சினார்க்கினியர் வரலாற்றில் எட்டுக்
தொகை, பத்துப் பாட்டு, பதினெண்கீழ்க் கணக்கு என்னும் மூன்று
தொகுதிகளில் அடங்கிய நூல்கள் இன்னவையென்று புலப்படுத்தும்
பாடல்களைப் பார்த்து அவர் பிரமித்துவிட்டார். “பெரிய
வித்துவான்களெல்லாம் படித்த நூல்களுக்கு மேற்பட்டனவாக வல்லவோ
இருக்கின்றன இவை? தமிழென்பது கரை காணாத அமுத சமுத்திரமோ!” என்று
ஆனந்தம்