பக்கம் எண் :

சுப்பிரமணிய தேசிகர் வியோகம் 627

இருந்த சீவகசிந்தாமணியை அச்சிட்டு எங்களுக்கு உபகாரம்
செய்தீர்கள். இப்படியே சூளாமணியையும் பதிப்பித்துத் தந்தால் எங்களாலான
உபகாரம் செய்கிறோம்” என்றார்கள். சந்திரநாத செட்டியார், “சீவகசிந்தாமணி
விஷயத்தில் நீங்கள் அரும்பாடு பட்டீர்கள். ஜைன சம்பிரதாயங்களைத்
தெரிந்து கொண்டிருக்கிறீர்கள், ஆகையால் சூளாமணியைப் பதிப்பிப்பது
மிகவும் சுலபமான காரியம்” என்றார். அவர்கள் சொல்வது எனக்கு
நியாயமகவே தோற்றியது. சூளாமணியைப் படித்துப் பார்த்த நான், அதுவும்
சிந்தாமணியைப் போலவே சிறப்புள்ள காவியமென்று உணர்ந்திருந்தேன்.
ஆகவே சூளாமணியிலே சிறிது கருத்தைச் செலுத்தலானேன். குறிப்புக்களையும்
எழுதி வைத்துக் கொண்டேன். இந்த நிலையில் தாமோதரம்பிள்ளை
சூளாமணியைப் பதிப்பிப்பதாகத் தெரிந்தது. அதனால் சூளாமணியை அச்சிடும்
முயற்சியை நிறுத்திக்கொண்டேன். சிலப்பதிகாரப் பகுதிகள் என் மனத்துக்குத்
திருப்தி அளிக்கும் முறையில் அச்சமயம் இராமையாலும், சில பகுதிகளுக்கு
உரை கிடைக்காமையாலும் பின்னும் பல பிரதிகளைத் தேடித் தொகுத்தே
ஆராய வேண்டுமென்ற நினைவினாலும் அந்த நூற்பதிப்பை உடனே
மேற்கொள்வதையும் விடுத்தேன்.

பத்துப்பாட்டு

சீவகசிந்தாமணி முற்றுப்பெற்ற சமயத்தில் தமிழ்த்தாயின் கட்டளையைப்
போல, என் கையில் பத்துப் பாட்டுப் பிரதி கிடைத்தது நினைவுக்கு வந்தது.
சங்க நூலாகிய அதனையே அச்சிட வேண்டுமென்று முடிவு
செய்துகொண்டேன். என்னுடைய குடும்பத்தார் வழிபடும் குலதெய்வமாகிய
திருவேரகப்பெருமானைத் தியானம் செய்து கொண்டு தனியாக இருந்த
திருமுருகாற்றுப் படையை எடுத்துப் படிக்கத் தொடங்கினேன்.

அத்தியாயம்-103

சுப்பிரமணிய தேசிகர் வியோகம்

பத்துப்பாட்டை வெளியிடலாமென்று முடிவு செய்த போது என் கையில்
அந்நூலின் ஏட்டுப் பிரதிகள் இரண்டே இருந்தன. அவற்றுள் ஒன்று
அபூர்த்தியானது. வேலூர்க் குமாரசாமி ஐயர் கொடுத்த பிரதி பூர்த்தியாக
இருந்தாலும் வழுக்கள் மிகுதியாகக் காணப்பட்டன. நச்சினார்கினியர் உரையும்,
சிறுசிறு பகுதிகளாக