பக்கம் எண் :

திருநெல்வேலிப் பிரயாணம் 637

மறு நாட் காலையில் அவ்விரு சகோதரர்கள் வீட்டிலும் உள்ள
சுவடிகளைப் பார்க்கத் தொடங்கினேன். மேலை வீதியில் உள்ள கவிராஜ
ஈசுவர மூர்த்திப் பிள்ளை வீட்டில் புத்தக அறை இருந்தது. அதுதான் அவர்கள்
பரம்பரை வீடு. புத்தக அறையைத் திறந்து காட்டினார்கள். பார்த்தவுடன் என்
உடம்பு சிலிர்த்தது. ‘தமிழ்ச் சங்கத்தில் முன்பு இப்படித்தான் சுவடிகளை
வைத்திருந்தார்களோ?’ என்று விம்மித மடைந்தேன். ஏட்டுச் சுவடிகளை
அடுக்கடுக்காகவும் ஒழுங்காகவும் வைத்திருந்தார்கள். சுவடிகளைக் கட்டி
வைத்திருந்த முறையே திருத்தமாக இருந்தது. புழுதி இல்லை; பூச்சி இல்லை;
ஏடுகள் ஒன்றோடொன்று கலக்கவில்லை. தமிழ்த் தெய்வத்தின் கோயிலென்று
சொல்லும்படி இருந்தது அவ்விடம்.

அங்கே இருந்த ஏடுகளைச் சோதித்துப் பார்த்தேன். பல வகையான
நூல்கள் இருந்தன. அச்சிட்ட புத்தகங்களின் ஏட்டுப் பிரதிகள் பல இருந்தன.
எல்லாவற்றையும் உடனே பார்த்துவிட வேண்டுமென்ற ஆசை முதலில்
எழுந்தது.

எனது ஏக்கம்

பத்துப் பாட்டுப் பிரதிகள் உள்ளனவா என்று முதலில் கவனிக்க
லானேன். ஒரு சுவடி கிடைத்தது. பொருநராற்றுப் படை முதல் நான்கு
பாட்டுக்களே உள்ளது அது. அதிலும் மூலம் தனியே காணப்படவில்லை.
‘இவ்வளவு சிறப்புள்ள இடத்திலேகூடப் பத்துப் பாட்டுக் கிடைக்கவில்லையே!
வேறு எங்கே கிடைக்கப் போகிறது!’ என்ற கவலை என்னைப்
பற்றிக்கொண்டது.

“என்ன யோசனை செய்கிறீர்கள்?” என்று நெல்லையப்பக் கவிராஜர்
கேட்டார்.

“ஒன்றும் இல்லை. சங்கப் புலவருடைய வீட்டைப்போல விளங்கும்
இவ்விடத்தில் தமிழ்ச் செல்வம் முழுவதும் கிடைக்குமென்று முதலில்
எண்ணினேன். நான் எதைத் தேடி வந்தேனோ அது முற்றும்
கிடைக்கவில்லையே! தமிழுலகத்தில் இந்தத் தமிழாலயத்தைக் காட்டிலும் சிறந்த
இடம் எங்கே இருக்கப் போகிறது! இங்கே அகப்படாதது வேறு எங்கே
அகப்படும்! சங்கத்துச் சான்றோர்கள் இயற்றிய நூல்களைத் தமிழுலகம் இப்படி
ஆதரவின்றிப் போக்கி விட்டதே!” என்று வருத்தத்தோடு கூறினேன்.

“இந்த வீடு ஒன்றுதான் இப்படி இருக்கிறதென்று நீங்கள் நினைக்க
வேண்டாம். இங்கே இன்னும் சில வீடுகளில் பல வகையான ஏட்டுச் சுவடிகள்
இருக்கின்றன. அங்கேயும் பார்க்கலாம்.