பக்கம் எண் :

திருநெல்வேலிப் பிரயாணம் 639

சுவடிகளும் அச்சிட்ட நூல்களும் இருந்தனவேயன்றிச் சங்கச் செய்யுளாக
ஒன்றும் கிடைக்கவில்லை.

தகடூர் யாத்திரை

பிறகு தெற்குப் புதுத் தெருவில் இருந்த கிருஷ்ண வாத்தியாரென்பவர்
வீட்டிற்குப், போனோம். அங்கே தொல்காப்பிய உரைச் சுவடி ஒன்றில்,
“நாங்குனேரியிலிருக்கும் ஒருவருக்கு என்னிடமிருந்த தகடூர் யாத்திரைப் பிரதி
ஒன்றைக் கொடுத்துவிட்டு இப்பிரதியை இரவலாக வாங்கிக் கொண்டேன்”
என்று எழுதியிருந்தது. யாரிடமிருந்து வாங்கியது என்று குறிப்பிடவில்லை.
தொல்காப்பிய உரையில் தகடூர் யாத்திரை என்ற பெயர் வருகின்றது. ஆதலால்
அது பழைய நூலென்று உணர்ந்திருந்தேன். அது நாங்குனேரியிலே
உள்ளதென்ற செய்தியைக் கண்டதும் அதனை எப்படியாவது கண்டு
பிடிக்கலாமென்று எண்ணி, “நாங்குனேரியில் கவிராயர்கள் வீடுகள்
இருக்கின்றனவா?” என்று உடனிருந்த அன்பர்களைக் கேட்டேன்.

“இருக்கின்றன. வைஷ்ணவர்களே அதிகமாகையால் வைஷ்ணவ நூல்கள்
கிடைக்கும்” என்று அவர்கள் சொன்னார்கள். “இந்தப் பிரதியில் தகடூர்
யாத்திரைச் சுவடியை அவ்வூரிலுள்ள ஒருவரிடம் கொடுத்திருப்பதாக
எழுதியிருக்கிறது. அங்கே சென்று தேடிப் பார்த்தால் கிடைக்குமோ?” என்று
வினவினேன்.

“கிடைக்கலாம். ஆனால் நிச்சயமாகச் சொல்ல முடியாது. இந்த
மாதிரியான புத்தகங்களை இப்போது யார் படிக்கிறார்கள்? நீங்கள் தேடும்
பத்துப் பாட்டே முழுவதும் கிடைக்கவில்லையே. இது போல அந்த நூலும்
கிடைக்காமல் போனாலும் போகலாம். இந்தத் தொல்காப்பியப் பிரதி இங்கே
இருப்பதுபோல இதற்குப் பரிவர்த்தனையாக அனுப்பிய தகடூர் யாத்திரை
அங்கே இருக்கவும் நியாயம் உண்டு.”

“கிடைத்தால் நல்லது” என்றேன் நான். ஆனால் பிற்காலத்தில்
நாங்குனேரியில் நான்கு முறை ஏடு தேடியபோது தகடூர் யாத்திரை
கிடைக்கவேயில்லை. பழைய நூல்கள் பல இந்த உலகத்தை விட்டு யாத்திரை
செய்து விட்டதைப்போல அந்த அருமையான நூலும் போய்விட்டதென்றுதான்
நினைக்கிறேன்.