பக்கம் எண் :

நல்ல சகுனம் 647

பிரதியையும், ஐங்குறுனூறு, பதிற்றுப்பத்து, புறப்பொருள் வெண்பாமாலை
இவற்றின் பிரதிகளையும் லக்ஷு மண கவிராயரிடம் வாங்கிக் கொண்டு
நண்பர்களிடம் விடைபெற்றுத் திருநெல்வேலி வந்து அங்கே பார்க்க
வேண்டியவர்களைப் பார்த்துவிட்டுக் கும்பகோணம் வந்து சேர்ந்தேன்.

அத்தியாயம்-106

நல்ல சகுனம்

வெள்ளூர்க் கவிராயர் வீடு

ஆழ்வார் திருநகரிப் பிரயாணத்தில் வெள்ளூரென்னும் ஊரில்
புகழ்பெற்ற கவிராயர் வீடொன்றில் ஏடு தேடியபோது ஒரு கம்பராமாயணப்
பிரதியில் ‘இராமாவதாரம்’ என்ற பெயர் எழுதப் பெற்றிருந்ததைக் கண்டேன்.

“நடையி னின்றுயர் நாயகன் றோற்றத்தின்
இடைநி கழ்ந்த இராமாவ தாரப் பேர்த்
தொடைநி ரம்பிய தோமறு மாக்கதை”

என்னும் கம்ப ராமாயணச் செய்யுளில் அந்நூற் பெயர்
இராமாவதாரமென்றே கூறப்பட்டுள்ளது. ஆதலின் அதன் இயல்பான பெயர்
இராமாவதாரமென்பதாக இருக்கலாமென்று தோற்றியது. பிற்காலத்திற்
புறத்திரட்டு என்னும் நூலை ஆராய்ந்தபோது அதில் கம்பராமாயணச்
செய்யுட்களின்கீழ் இராமாவதாரமென்ற பெயரே எழுதப் பெற்றிருத்தலைக்
கண்ட பிறகு அந்தக் கருத்து உறுதியாயிற்று.

திருச்சிற்றம்பலக் கோவையாரின் உரையாசிரியர் இன்னாரென்று
அக்காலத்தில் தெரியவில்லை. நச்சினார்க்கினியருரையென்றே பலர் அதனைக்
கருதி வந்தனர். நானும் அப்படியே எண்ணினேன். சீவக சிந்தாமணியின் முதற்
பதிப்பில் நச்சினார்க்கினியர் வரலாறு எழுதிய போது அவர் உரை இயற்றிய
நூல்களில் திருக்கோவையாரையும் சேர்த்திருந்தேன். வெள்ளூர்க் கவிராயர்
வீட்டிற் கண்ட அந்நூற் சுவடி ஒன்றின்மேல், அவ்வுரை
பேராசிரியருடையதென்ற குறிப்பு இருந்தது. நச்சினார்க்கினியர் கோவையாருக்கு
உரை எழுதினாரென்ற கருத்தை உடனே மாற்றிக் கொண்டேன். பிரயோக
விவேக உரையினாலும் இக்கருத்து வலியுற்றது. நான் சென்றிருந்த காலத்தில்