பக்கம் எண் :

652என் சரித்திரம்

பாட்டுக்களை முதலில் முடித்து விட்டுக் கடைசியில் திருமுருகாற்றுப்
படையைப் பார்த்து வந்தேன். மூலத்தையும் உரையையும் பிரித்து எப்படி எழுத
வேண்டுமோ அப்படி எழுதச் செய்தேன். ஒரு நாள் காலையில் ஒன்பது
மணிக்குத் திருமுருகாற்றுப்படை பூர்த்தியாயிற்று. ஒரு விதமான திருப்தி
எனக்கு உண்டாயிற்று. அப்போது வீதியில் நாகசுர சத்தம் கேட்டது.
கவனித்தோம். சுப்பிரமணிய பக்தராகிய நாயுடு ஒருவர் காவிரியில் ஸ்நானம்
செய்து விபூதியை உடம்பெல்லாம் பூசிப் பாற்காவடி ஒன்றை எடுத்துக் கொண்டு
வந்தார். உடம்பெல்லாம் அலகுடன் முருகன் துதியான சில பாடல்களைச்
சொல்லிக் கொண்டும் ஆடியபடியே வந்தார். நாகசுரக்காரன் அவருடைய
பாட்டுக்கும் ஆட்டத்திற்கும் ஏற்ப வாசித்து வந்தான்.

திருமுருகாற்றுப்படை எழுதி முடிவதற்கும் அந்த முருகனடியார் காலடி
எடுத்து வாயிலில் வந்து நின்றதற்கும் சரியாக இருந்தது. பலவகைத் தடைகளால்
புண்பட்ட எனக்கு அக்காட்சி மிக்க ஆறுதலளித்தது. “திருமுருகாற்றுப்
படையை முடித்தோம். ஆண்டவன் திருவருள் இந்த வேலையை
முற்றுவிக்குமென்பதற்கும் அடையாளமாக இக்காட்சியைக் காண்கிறோம்” என்று
நான் உள்ளுணர்ச்சி பொங்கிவரக் கிருஷ்ணையரைப் பார்த்துச் சொன்னேன்.

“நல்ல சகுனந்தான்” என்று அவரும் ஆமோதித்தார்.

அத்தியாயம்- 107

கண்டனப் புயல்

சீவகசிந்தாமணிப் புத்தகம் தமிழ் நாட்டாருடைய அன்புக்கு
உரியதாயிற்று அதிலிருந்து பல விஷயங்களைத் தெரிந்து கொண்ட அறிஞர்கள்
என்னைப் பாராட்டியதோடு பத்துப் பாட்டுப் பதிப்பையும் விரைவில்
நிறைவேற்ற வேண்டுமென்று தெரிவித்தார்கள். சீவகசிந்தாமணியின்
முகவுரையிலும் நூலின் அடிக்குறிப்புக்களிலும் புறநானூறு முதலிய பல பழைய
நூற் பெயர்களைக் கண்டவர்கள் அவற்றையெல்லாம் ஒன்றன்பின் ஒன்றாகப்
பதிப்பிக்க வேண்டுமென்று எனக்கு ஊக்கமளித்து வந்தார்கள்.

சிலர் விஷமச் செயல்

இப்படி அபிமானிகளுடைய ஆதரவு எங்கும் வளர்ந்து வந்த போது
ஒரு பால் சில பொறாமைக்காரர்களின் விஷமச் செயல்களும்