பக்கம் எண் :

பத்துப்பாட்டுப் பதிப்பு 659

கூட்டத்தாரைக் கண்டிக்கப் புகுந்தார். அவர் பாஷைக்கு இவர் பாஷை
தாழவில்லை. கண்டனம் பல பல துறையிலே சென்றது. ஒருவருக்கொருவர்
அவரவர் பதிப்பித்த பாட புத்தகத்திலும் உரையிலும் உள்ளவற்றைப் பற்றிய
கண்டனத்திலே புகுந்தனர். வசனமெழுதினர்; வசை பரப்பினர்; செய்யுளாகவும்
இந்தச் சண்டை பரிணமித்தது. நேருக்கு நேரே சொல்லவும் நாணும்
வார்த்தைகள் அச்சில் செய்யுளில் வந்து புகுந்தன. கடைசியில் மிஞ்சியது
ஒன்றும் இல்லை.

இந்தச் சண்டையில் ஈடுபடத் தொடங்கியது முதல், என்பால் வருவதை
நிறுத்திக்கொள்ளும்படி சண்முகம்பிள்ளையிடம் சொல்லி விட்டேன்.

அத்தியாயம்- 108

பத்துப் பாட்டுப் பதிப்பு

பத்துப்பாட்டைப் பதிப்பிக்கும் விஷயத்தில் பொருள் முட்டுப்பாடு
நேர்ந்தால் என்ன செய்வதென்ற யோசனை எனக்கு உண்டாயிற்று.
சிந்தாமணிக்குச் செய்தது போலவே இதற்கும் அன்பர்களிடம் கையொப்பம்
வாங்கலாமென்று எண்ணி ஒரு பத்திரிகை அச்சிட்டுப் பலருக்கு அனுப்பினேன்.

கையொப்பம் வாங்கியது

மதுரையில் டெபுடி கலெக்டராக இருந்த ம.தில்லை நாயகம் பிள்ளை,
ஸாது சேஷையர், சோழன் மாளிகை ரத்தினம்பிள்ளை, ஆர்.வி.ஸ்ரீநிவாசையர்,
தஞ்சாவூர் வக்கீல் கீ.சி.ஸ்ரீநிவாச பிள்ளை முதலிய அன்பர்கள் பொருளுதவி
செய்தனர். சிறுவயல் ஜமீன்தாராக இருந்த ஸ்ரீ முத்துராமலிங்கத்தேவர் என்னை
முன்பு அறியாதவராக இருந்தும் தக்க பொருளுதவி செய்வதாகக் கடிதம்
எழுதினர். இருநூறு ரூபாய் வரையில் சேர்ந்தது, அப்போது கும்பகோணத்தில்
இருந்த ஒரு கனவான், “காலேஜ் பண்டிதர் சாமிநாதையர் பத்துப்பாட்டை
அச்சிடுவதாகச் சொல்லிக் கையொப்பம் வாங்கிக் கொண்டிருக்கிறார். இது
பணம் சம்பாதிக்கும் வழியென்று தோற்றுகிறது” என்று சொன்னதாக என்
காதில் விழுந்தது. அதுமுதல் கையொப்பம் வாங்குவதை நிறுத்திக்
கொண்டேன்.