பக்கம் எண் :

676என் சரித்திரம்

குத்தியது; உள்ளே போய்ப் பார்த்து விட்டு வந்தபோது அது
கண்ணையும் கருத்தையும் குத்தியது. இந்த நாட்டின் நிலைக்கு நான் இரங்கி
வருந்தினேன்.

அச்சிறுகோயிலுக்கருகே வட்டமான குளமொன்றைக் கண்டேன். அங்கும்
பல சிற்ப வேலைகள் என் கண்ணுக்கு விருந்தாயின. என்னுடன் வந்த ஒருவர்,
“இதோ ஒரு வேடிக்கை காட்டுகிறேன், பாருங்கள்” என்றார். நான்
கவனித்தேன். ஒரு கல்லை எடுத்து அக்குளத்தில் நேரே ஓங்கி அடித்தார்.
அந்த கல் உடனே எதிர்ப் பக்கத்திலடித்து அங்கிருந்து மீட்டும் எதிர்த்தடித்து
இப்படியே மூன்று பக்கங்களிலும் பந்து போலடித்து மீட்டும் பழைய இடத்
துக்கே திரும்பி வந்தது. “இவை யாருடைய திருப்பணி?” என்று கேட்டேன்.
“பழைய காலத்தில் அரசாங்க அதிகாரியாக இருந்த கட்டியப்ப முதலியாருடைய
திருப்பணி” என்று அவர் கூறினார்.

தாரமங்கலம் சென்றதில் சிலப்பதிகாரம் கிடைக்காவிட்டாலும் சிற்பச்
செல்வத்தைக் கண்டு களித்த திருப்தி உண்டாயிற்று. அங்கிருந்து வேறு சில
ஊர்களுக்குச் சென்று தேடியும் சிலப்பதிகாரம் கிடைக்கவில்லை. சில வீர
சைவர்கள் வீட்டில் பெஸ்கி பாதிரியார் தொகுத்த சதுரகராதி என்ற நூல்
ஏட்டில் எழுதப்பெற்ற பகுதிகளைக் கண்டேன். ‘வண்டி ஓரிடத்திலே; ஓடம்
வண்டியிலே’ என்று ஒரு பழமொழி சொல்லுவார்கள். ஏட்டுச்சுவடியிலுள்ள
பழைய நூல்களை அச்சிடுவதைக் கண்டவன் நான். அச்சிலிருந்த சதுரகராதியை
ஏட்டில் எழுதி வைத்திருப்பதை அன்று கண்டு நான் தமிழ் மகக்ளிடத்தில்
பழைய வழக்கம் எவ்வளவு ஊறியுள்ள தென்பதை உணர்ந்தேன்.

கரிவலம் வந்த நல்லூர்

இந்தப் பிரயாணத்தில் ஒன்றும் அகப்படாமற் போகவே கும்பகோணம்
வந்து சேர்ந்தேன். எப்படியாவது நல்ல சிலப்பதிகாரப் பிரதிகள்
கிடைத்தாலொழிய எனக்குத் தூக்கமே வராதென்று தோன்றியது. மீண்டும்
பாண்டி நாட்டுக்குப் போய்ச் சுவடிகளைத் தேட வேண்டுமென்று முடிவு
செய்தேன். காலேஜ் வேலையோடு ஏடுதேடும் வேலையையும்
வைத்துக்கொள்வது சிரமமாக இருந்தது. திருநெல்வேலிப் பக்கம் போனால் சில
நாட்கள் அவகாசத்தோடு தேட வேண்டும். காலேஜ் வேலை அதற்கு இடங்
கொடாமையால் ஒவ்வோரிடமாகத் தேடலாமென்றெண்ணி ஒரு முறை கரிவலம்
வந்த நல்லூருக்குப் புறப்பட்டுச் சென்றேன். சுப்பிரமணிய தேசிகர் இருந்த
காலத்தில் அவ்வூருக்கு முன்பு ஒரு