நான் இரண்டு நாட்கள் தங்கிப் பார்க்கலா மென்ற விருப்பத்தோடு வந்தேன். எனக்குச் சிரமம் கொடுக்காத நிலையில் அவர்கள் செய்து விட்டார்கள். மறுபடியும் ஆலயத்துள் சென்றேன். “இந்த அக்கிரமம் இனியாகிலும் நடவாதபடி திருவுள்ளம் இரங்க வேண்டும்” என்று இறைவனிடம் முறையிட்டேன். “சிந்தனை யுனக்குத் தந்தேன் திருவருளெனக்குத் தந்தாய் வந்தனை யுனக்குத் தந்தேன் மலரடி யெனக்குத் தந்தாய் பைந்துண ருனக்குத் தந்தேன் பரகதி எனக்குத் தந்தாய் கந்தனைப் பயந்தநாதா கருவையில் வாழுந்தேவே” என்று துதித்து விட்டு வெறுங்கையோடு கும்பகோணம் வந்து சேர்ந்தேன். இந்த இரண்டு பிரயாணங்களும் பயனற்ற பிரயாணமாக முடிந்தன. ‘இறைவன் திருவருள் என்று சிலப்பதிகாரத்தின் நல்ல பிரதியை நமக்குக் கிடைக்கச் செய்யுமோ’ என எண்ணியபடியே ஆராய்ச்சியை நடத்தி வந்தேன். அத்தியாயம்-111 பல ஊர்ப் பிரயாணங்கள் 1890-ஆம் வருஷம் கோடை விடுமுறையில் சிலப்பதிகாரப் பிரதிகளைத் தேடுவதற்காகத் தென்பாண்டி நாட்டை நோக்கிப் புறப்பட்டேன். அங்கங்கே உள்ள கிளை மடங்களில் அதிகாரிகளுக்கு என் வரவைத் தெரிவித்து வேண்டிய உதவி புரியும்படி திருவாவடுதுறை அம்பலவாண தேசிகர் உத்தரவு அனுப்பினார். திருநெல்வேலி முதலில் திருநெல்வேலியை அடைந்து அங்கே முன்பு பாராத இடங்களில் ஏட்டுச் சுவடிகளைத்தேட எண்ணியபோது கவிராஜ ஈசுவர மூர்த்திப் பிள்ளை மிக்க உதவியாக இருந்தார். முந்திய தடவை தேடிய இடங்களிலேயே மீண்டும் தேடலானேன். பத்துப் பாட்டைத் தேடும்போது அந்த நூலில் மாத்திரம் கவனம் இருந்தது. இப்போது சிலப்பதிகாரத்தின் மேற் கருத்துச் சென்றது. சாலிவாடீசுவர ஓதுவார் வீட்டில் சிலப்பதிகார மூலப் பிரதி ஒன்றும் மூலமும் உரையும் உள்ள பிரதி ஒன்றும் கிடைத்தன. அந்த உரைப் |