பக்கம் எண் :

682என் சரித்திரம்

சாமி பிள்ளையென்பவர் வைத்திருந்த சிந்தாமணி, பத்துப் பாட்டு
என்னும் இரண்டு நூல்களின் ஏட்டுச் சுவடிகள் எனக்கு முன்பு கிடைத்தன.
அவை திருத்தமான பிரதிகளாக இருந்தன. அவர் வீட்டுக்குச் சென்று
தேடினால் வேறு நூல்கள் கிடைக்கலாமென்ற நினைவினால்
பெருங்குளத்திலிருந்து ஆறுமுக மங்கலம் சென்றேன். குமாரசாமி பிள்ளையின்
மருகராகிய சுந்தரமூர்த்திப்பிள்ளை என்பவர் அங்கே இருந்தார். அவர் தம்
வீட்டிலுள்ள சுவடிகளையெல்லாம் காட்டினார். பல பழைய ஏடுகள் இருந்தன.
அகநானூறு, புறநானூற்றின் குறைப்பிரதி ஒன்று, சிலப்பதிகார உரை, தமிழ்
நாவலர் சரித்திரம் என்பவை எனக்குக் கிடைத்தன.

சுந்தரமூர்த்திப் பிள்ளை அவ்வூர் அக்கிரகாரத்தில் ஒரு வீட்டில் என்
ஆகாரத்துக்கு ஏற்பாடு செய்தார். அங்கே அன்று பகற்போசனம் செய்து
கொண்டேன். எனக்கு அந்த வீட்டுக்காரர் பெரிய விருந்து
நடத்தினாரென்றுதான் சொல்ல வேண்டும். அந்த விருந்துணவை உண்டபோது
அவ்வூர் சம்பந்தமான வரலாறு ஒன்று எனது நினைவுக்கு வந்தது.

ஆண்டான் கவிராயரென்ற பிராமண வித்துவான் ஒருவர் ஆறுமுக
மங்கலத்துக்கு வந்தார். ஆறுமுக மங்கலம் பெரிய ஊர். ஆயிரத்தெட்டுப்
பிராமணர் வீடுகள் முன்பு அங்கே உண்டென்றும், அவருள் விநாயகர்
ஒருவரென்றும் சொல்வார்கள். அங்குள்ள விநாயகருக்கு ஆயிரத்தெண்
விநாயக ரென்பது திருநாமம்.

அவ்வளவு பெரிய ஊரில் ஆண்டான் கவிராயருக்கு என்ன
காரணத்தாலோ பசிக்கு உணவு கிடைக்கவில்லை. அவர் வசை பாடுவதில்
வல்லவர். பிற்காலத்துக் காளமேகமென்று சிலர் அவரைச் சொல்வதுண்டு. பசி
மிகுதியால் அவர் வருந்தியபோது கோபத்தால், “ஆறுமுகமங்கலத்துக்கு யார்
போனாலும், சோறு கொண்டு போங்கள், சொன்னேன், சொன்னேன்” என்று
சொல்லிச் சில வசை கவிகளும் பாடினாராம்.

இந்த வரலாற்றுக்கும் எனக்குக் கிடைத்த விருந்துக்கும் நேர்மாறாக
இருந்தது. “ஆண்டான் கவிராயர் இந்த ஊரைப் பற்றி இழிவாகச்
சொல்லியிருக்கிறார். ஆனால் எங்கும் சாப்பிடாத புதிய புதிய உணவுகள்
எனக்கு இங்கே கிடைக்கின்றனவே!” என்று உடன் உண்ட ஒருவரிடம் நான்
சொன்னேன்.

“ஆம், அந்த இழிவைப் போக்குவதற்காகவே யார் வந்தாலும்
இவ்வூரார் விசேஷமான விருந்து செய்வித்து அனுப்புவது வழக்கம்” என்று
அவர் விடை பகர்ந்தார்.