பக்கம் எண் :

684என் சரித்திரம்

அப்போது திரிகூட ராசப்பக் கவிராயர், “நான் வந்திருந்த சமயத்தில்
கடைசித் தடவையாக ஏட்டுச் சுவடிகளை வாய்க்காலில் போட்டுக்
கொண்டிருந்தார்கள். நான் அதைப் பார்த்தேன். கடைசியில் மிஞ்சியிருந்த சில
ஏடுகளைக் கொண்டு போன ஒரு பையன் கன்னத்தில் ஓங்கி ஓர் அறை
அறைந்து அந்தக் கட்டைப் பிடுங்கி உள்ளே பீரோவின் மேல்
வைத்திருக்கிறேன். அதை எடுத்து வாருங்கள்” என்று வீட்டுக்காரரை நோக்கிச்
சொன்னார்.

அந்தக் கட்டைக் கொணர்ந்து என் முன் போட்டார்கள். எனக்கு
முன்பே எலி அந்தச் சுவடியை ஆராய்ச்சி செய்திருந்தமையால் பல ஏடுகள்
துண்டு துண்டுகளாகக் கிடந்தன. அவை திருப்பூவண நாதருலா முதலிய சில
பிரபந்தங்களின் பகுதிகளாக இருந்தன. சிலப்பதிகாரத் துணுக்குகளும்
கிடைத்தன. அவற்றைப் பொறுக்கி எடுத்து வைத்துக்கொண்டேன். எழுத்துக்கள்
தெளிவாகவும் பிழையின்றியும் இருந்தன. அவற்றைக் காணக் காண
அகப்படாமற் போன ஏடுகளின் சிறப்பை நான் உணர்ந்து உணர்ந்து
உள்ளழிந்தேன்.

‘சிறப்பதிகாரம்’

திருநெல்வேலியிலிருந்து திரிகூட ராசப்பக் கவிராயரையும்
அழைத்துக்கொண்டு அம்பா சமுத்திரம் சென்றேன். இடையே ஓர் ஊரில் ஓர்
அபிஷிக்தர் (சைவர்களின் குரு) வீட்டுக்குப் போனோம். எங்களை
நெடுந்தூரத்தில் கண்டதும் அவ் வீட்டுக்காரராகிய அபிஷிக்தர் உள்ளே
எழுந்து சென்றார். அவருக்கு எழுபது பிராயம் இருக்கும், அவருடைய குமாரன்
ஒருவன் எங்களை வரவேற்றான். பிறகு உள்ளே சென்று ஒரு பலகை எடுத்து
வந்து திண்ணையில் போட்டான். மற்றொரு பலகையைச் சுவரோரமாகச்
சார்த்தினான். அவ்வாறு ஆசனம் அமைத்தவுடன் உள்ளிருந்து பெரியவர்
வந்தார். காதில் ஆறு கட்டி சுந்தர வேடமும், தலையில் ருத்திராட்ச
மாலையும், கழுத்தில் ருத்திராட்ச கண்டியும் அணிந்து கொண்டு அவர் வந்து
பலகையின் மேலமர்ந்து, “வாருங்கள்” என்று எங்களை வரவேற்றார். அந்த
அலங்காரமில்லாமல் சாதாரண மனிதராக மற்றவர் கண்களில் படக்கூடாது
என்பது அவர் எண்ணம் போலும்! அவர் என்னுடன் வந்த திரிகூட ராசப்பக்
கவிராயருக்குப் பழக்கமானவர்; அவருடைய உதவியைப் பெறுபவர்.

நாங்கள் திண்ணையில் அமர்ந்தோம், “எங்கே வந்தீர்கள்? அடிக்கடி
உங்களைப் போன்ற கனவான்கள் இங்கே விஜயம் செய்கிறார்கள். நான்
அவ்வளவு மரியாதைக்கு ஏற்றவனல்ல. என்ன விசேஷம்?” என்றார்.