பக்கம் எண் :

தமிழும் சங்கீதமும் 69

முதலியனவும் வேமன்ன சதகம், ராமதாச சதகமென்னும் சிறு நூல்களும்
கற்றேன்.

சங்கீதத்திலும், தமிழிலும் என் புத்தி சென்றது போலத் தெலுங்கிற்
செல்லவில்லை. என் நிலைமையை உணர்ந்த தந்தையார் சிறிது வருத்தத்தை
அடைந்தார்; “நீ ஒரு காரியத்திற்கும் உபயோகம் இல்லாதவன்; பரிசாரக
வேலைக்கு கூடப் பயன்பட மாட்டாய்” என்று என்னைக் கடிந்து கொண்டார்.
அன்று அவர் கூறின அவ் வார்த்தைகள் என் மனத்தைப் புண்படுத்தின. நான்
என்ன செய்வேன்! எனக்குப் படிப்பில் விருப்பம் இருந்தது; தமிழும் சங்கீதமும்
எனக்கு இன்பத்தை அளித்தன. தெலுங்கில் அந்த இன்பத்தை நான்
காணவில்லை. எனக்கும் அதற்கும் வெகுதூரமென்ற எண்ணம்
ஆரம்பத்திலேயே எனக்கு உண்டாயிற்று. நான் வேண்டுமென்று அதை
வெறுக்கவில்லை.

தெலுங்கு கற்பதனால் வீண் சிரமம் உண்டாவதைத் தந்தையார்
உணர்ந்தமையால் என்னைப் பள்ளிக்கூடத்திற்கு அனுப்பாமல் நிறுத்திக்
கொண்டார். வீட்டில் தாமே சதகங்களையும் வேறு நூல்களையும் கற்பித்து
வரலானார். சங்கீதத்திலும் சரளி, வரிசை, அலங்காரம் முதலியவற்றைக் கற்றுத்
தந்தார். நான் சிறிதளவேனும் அயர்வாக இருந்தால் கடுமையாகக் கண்டிப்பார்.
அவர் செய்யும் தண்டனையினால் நான் துன்புறுவேன்; என் துன்பத்தைக்
கண்ட என் தாயாரும் வருந்துவார்.

அத்தியாயம்-13

தமிழும் சங்கீதமும்

என் தகப்பனார் சொற்படி பள்ளிக்கூடத்திற் படிப்பதை விட்டு
வீட்டிலேயே படித்து வந்தேன். தெலுங்கு ஸம்ஸ்கிருதம் இரண்டும் என்னை
விட்டுப் பிரிந்து நெடுந்தூரம் சென்றுவிட்டன.

ஒன்றுக்கும் உதவாதவனாக நான் போகக் கூடாதென்ற கவலையினால்
நான் ஏதேனும் ஜீவனத்துக் கேற்ற வித்தையைக் கற்றுக் கொள்ள
வேண்டுமென்று என் தந்தையார் விரும்பினார். அரியிலூரில் இருந்த தில்லைக்
கோவிந்தபிள்ளை என்பவரிடம் என்னை ஒப்பித்துக் கிராமக் கணக்கு
வேலையைப் பயிலுவிக்கும்படி வேண்டிக் கொண்டார். நான் அவரிடமிருந்து