பக்கம் எண் :

712என் சரித்திரம்

‘விடியற் காலையில் எழுந்து எழுதிவிட வேண்டும்’ என்ற
தீர்மானத்தோடு ஒரு மெழுகுவர்த்தியும் நெருப்புப் பெட்டியும் வாங்கி வைத்துக்
கொண்டேன்.

நன்றாகத் தூங்கினேன். இரவில் இடையே விழிப்பு ஏற்பட்டது.
பூர்த்தியாகாத சிலப்பதிகாரப் புத்தகம் என் அகக் கண்முன் நின்றது. எழுந்து
விளக்கேற்றிப் பார்க்கையில் இரண்டு மணிதான் ஆகியிருந்தது. அரைத்
தூக்கத்தில் எழுந்தமையால் மீட்டும் படுத்துக் கொள்ள வேண்டுமென்ற
உணர்ச்சியே மேலோங்கி நின்றது.

‘படுத்துக் கொண்டால் நான்கு மணிக்கு எழுந்திருக்க முடியுமா?
அயர்ச்சியால் நெடுநேரம் தூங்கி விட்டால் காரியம் அரைகுறையாக நின்று
விடுமே!’ என்று பலவிதமான சிந்தனைகள் எழுந்தனவே யொழிய எழுத
வேண்டுமென்ற வேகம் உண்டாகவில்லை. உலகமெல்லாம் குறட்டை விட்டுத்
தூங்கும் அச்சமயத்தில் ஓய்ந்து போன நிலையில் எனக்கு ஊக்கம்
ஏற்படுவதற்கு அனுகூலமான பொருள் யாதும் இல்லை.

கண்கள் சுழன்றன. கொட்டாவி விட்டேன்; அண்ணாந்த போது எதிரே
சுவரில் இருந்த ஒரு படம் என் கண்ணிற் பட்டது. இன்னாருடைய படமென்று
தெரிந்து கொள்ள முடியவில்லை. படத்திலுள்ளவர் மிக்க் சுறுசுறுப்பும்
முயற்சியும் உடையவரென்பது தோற்றத்திலிருந்தே தெரிந்தது. அத்தோற்றம்
என் உள்ளத்துள்ளே ஊக்கத்தை எழுப்பியது. ‘இவர் யாரோ தெரியவில்லை;
என்ன துடியாய் இருக்கிறார்! நாம் சோர்விலே மூழ்கியிருக்கிறோமே!’ என்று
எண்ணினேனோ இல்லையோ, உடனே பேனாவை எடுத்தேன்; எழுதத்
தொடங்கி விட்டேன்.

அரும்பதவுரையைப் பற்றி என் ஞாபகத்துக்கு வந்தவற்றை
வைத்துக்கொண்டு சுருக்கமாக ஒரு முகவுரை எழுதி முடித்தேன். அப்படி
எழுதியதை மீட்டும் படித்துச் செப்பஞ் செய்து கொண்டேன். பிறகு எனக்குத்
தூக்கம் வர நியாயம் ஏது?

காலையில் விசுவநாத சாஸ்திரியாரிடம் அந்தப் படம் யாருடையதென்று
விசாரித்தேன். அவருடைய தலைவராகிய நார்ட்டன் துரையினதென்று தெரிந்து
கொண்டேன். அப்படத்தைக் கண்டு எனக்கு உண்டான ஊக்கத்தையும்
அதனால் விளைந்த நன்மையையும் அவரிடம் சொன்னேன்.