பக்கம் எண் :

சிலப்பதிகார வெளியீடு 715

எழுதி விளக்கும் ‘புறத்திட்டு’ என்னும் புத்தகத்திலெழுதப்
பட்டிருத்தலால், முத்தொள்ளாயிரத்தி லுள்ளதென்றறியப் பட்டது” என்று
புறத்திரட்டைப் பற்றிய செய்தியை எழுதினேன்.

இவ்வாறே அகநானூறு, குறுந்தொகை, பதிற்றுப்பத்து, பரிபாடல்,
புறநானூறு, மணிமேகலை என்னும் பழைய நூல்களைப் பற்றிய குறிப்புக்களை
விரிவாக எழுதினேன். திருக்கோவையாருரை பேராசிரியர் இயற்றியதென்பதை
ஒரு குறிப்பிற் பின்வருமாறு வெளிப்படுத்தினேன். “அவ்வுரையாசிரியர்
நச்சினார்க்கினியரென்பது பலருடைய கொள்கை; யான் எண்ணியிருந்ததும்
அதுவே. ஆயினும் தமிழ்ப் பிரயோக விவேக நூலாசிரியராகிய சுப்பிரமணிய
பண்டிதர் தாமியற்றிய அப்பிரயோக விவேக நூலுரையில் இந்நூலுக்கு உரை
செய்தோர் பேராசிரியரென்று பலவிடத்தும் புலப்படுத்தினமையானும்,
தென்னாட்டில் ஆழ்வார் திருநகரி முதலியவற்றிலிருந்த பரம்பரைத் தமிழ்
வித்துவான்கள் வீடுகளில் இருக்கும் ஏட்டுப் பிரதிகளில் திருச்சிற்றம்பலக்
கோவையாருரை என்றுள்ளவைகளுட் பலவற்றின் தலைப்பிலும்
பேராசிரியருரையென்றே எழுதப்பட்டிருத்தலானும், உன்றிப் பார்த்தவிடத்துச்
சிறிதும் அவைகள் வேறுபாடின்றி அச்சிடப்பட்ட உரையாகவே இருத்தலானும்
இந்நூலுரையாசிரியர் நச்சினார்க்கினியரென்று ஒரு தலையாகச் சொல்லக்
கூடவில்லை.”

நான் எழுதிய இத்தகைய குறிப்புக்கள் தமிழன்பர்களுடைய ஆவலை
அதிகமாக்கின. முகவுரையின் இறுதியில், “இச்சிலப்பதி காரத்தைப் போலவே
நான் பதிப்பிக்க விரும்பிய நூல் ஒவ்வொன் றையும் கருதிய வண்ணம்
நிறைவேற்றுதற் பொருட்டும், பிரதியுதவி பொருளுதவி முதலியன புரிந்தோர்
பெரு வாழ்வடையும் பொருட்டும் திருவருள் சுரக்கும்படி எல்லாம் வல்ல
முழுமுதற் கடவுளாகிய இறைவனுடைய திருவடித் தாமரைக்களைப்
பிரார்த்திக்கின்றேன்” என்று எழுதியிருந்தேன். இவையெல்லாம் சேர்ந்து தமிழ்
நாட்டில் ஒரு கிளர்ச்சியை உண்டாக்கின. அங்கங்கே உள்ளவர்கள் கூடி
என்னை வாழ்த்தி மேலும் நூல்களைப் பதிப்பித்து வெளியிட வேண்டுமென்று
அறிவித்தனர். என்னுடைய அன்பர்கள் தனித்தனியே கடிதம் எழுதி, இன்ன
இன்ன நூலைத் தொடங்க வேண்டுமென்று வற்புறுத்தினர்.

சிலப்பதிகாரம் நிறைவேறியவுடன், இவ்வாறு வேறு அணிகலன் களையும்
துலக்கித் தமிழ் மகளுக்கு அணியவேண்டுமென்ற அன்புக் கட்டளை தமிழ்
நாட்டாரிடமிருந்து எனக்குக் கிடைத்தமையின், மீண்டும் எந்த நூலைத்
தொடங்கலாமென்ற எண்ணத்தில் நான் ஆழ்ந்தேன்.