பக்கம் எண் :

730என் சரித்திரம்

தமிழ் நாட்டுச் சரித்திர ஆராய்ச்சியைப் பலர் மேற்கொள்வார்கள்.
விரைவில் பதிப்பித்து நிறைவேற்ற வேண்டும்’ என்றும் எழுதினார்.

இப்படிப் பல பல முறையிலே சேகரித்த பலவகைக் குறிப்புக்களை
வைத்துக் கொண்டு ஆராய்ந்து புறநானூற்றை ஒருவகையாகச் செப்பம் செய்து
அச்சுக்குக் கொடுப்பதற்காகச் சென்னைக்குப் புறப்பட்டுச் சென்றேன்.

அத்தியாயம்-118

மூன்று துக்கச் செய்திகள்

புறநானூறு 1893-ஆம் வருஷம் ஜனவரி மாதம் வெ நா. ஜூபிலி
அச்சுக்கூடத்தில் அச்சாகத் தொடங்கியது. வழக்கம்போல் நான் ராமையங்கார்
தோட்டத்தில் தங்கி அச்சு வேலையைக் கவனித்து வந்தேன். இப்பதிப்புக்குத்
திருமானூர்க் கிருஷ்ணையரது சகாயத்தைப் பெற முடியாமற் போயிற்று. வை.
மு சடகோப ராமானுஜாசாரியர் என்னுடனிருந்து மிக்க உதவி செய்து வந்தார்.
பதிப்பிக்கும் விஷயத்தில் அவருக்குச் சிறந்த திறமை இருந்தது. அவர் ஒருவரே
இரண்டு மூன்று பேர் செய்யக் கூடிய வேலைகளைச் செய்தார். ஆகையால்
பதிப்பு விரைவாகவே நடை பெற்று வந்தது.

சதாசிவ பிள்ளை பிரதி

சென்னையில் ஆறுமுக நாவலருடைய அச்சுக்கூடத்தைக் கவனித்து
வந்த சதாசிவ பிள்ளையிடம் ஒருநாள் போயிருந்தேன். அவர் தம்மிடம்
புறநானூற்றுப் பிரதியென்று இருப்பதாகச் சொல்லிப் பிறகு ஒரு நண்பர் மூலம்
எனக்கு அனுப்பினார். அதில் மூலம் மாத்திரம் இருந்தது; நூல் முழுவதும்
இல்லை. 267-ஆம் செய்யுள் முதல் 369-ஆம் செய்யுள் வரையிலும் இருந்தன.
ஒரு செய்யுள் கிடைத்தாலும் போற்றிப் பாதுகாக்கும் எனக்கு அந்தப் பிரதி பல
வகையில் உபயோகமாக இருந்தது.

அந்த முறை புறநானூற்றில் 18 பாரங்கள் நிறைவேறின. காலேஜ்
திறக்கும் காலம் சமீபித்தமையால் மேலே ப்ரூபைக் கும்பகோணத்துக்கு
அனுப்பும்படி ஏற்பாடு செய்து விட்டு நான் புறப்பட்டு விட்டேன். சேலத்து
வழியாகச் சில ஊர்களைப் பார்த்துக் கொண்டு சென்றேன். புறநானூற்றிலே
சொல்லப்பட்ட ஊர்களிற் சிலவற்றைக் கண்டு அவற்றின் வரலாற்றை விசாரிக்க
வேண்டு