பக்கம் எண் :

734என் சரித்திரம்

செய்தோம். அப்பொழுது அவருக்கு நல்ல ஞாபகம் இருந்தது. பஞ்சாட்சர
மந்திரத்தின் தியான சுலோகத்தையும் ஸ்ரீ மீனாட்சி சுந்தரேசர் தியான
சுலோகத்தையும் அவர் சொல்லிக் கொண்டே இருந்தார். நான் அருகிலிருந்து
கவனித்து வந்தேன். நினைவு மறக்கும் தறுவாயில் என்னை அவர் அழைத்து
மெல்ல, “சிவபக்தி பண்ணிக் கொண்டிரு” என்று சொன்னார். அதன் பிறகு
என் தந்தையாருடைய வார்த்தையைக் கேட்கும் பாக்கியம் எனக்கு இல்லாமற்
போயிற்று. அவர் கூறிய அந்த உபதேசத்தை நான் மறக்கவில்லை; என்னால்
இயன்றவரையில் கடைப்பிடித்து வருகிறேன். சிவபெருமானுடைய பக்தர்
கூட்டத்தில் சேருவதற்கு எனக்குச் சிறிதும் தகுதியில்லை. என் தந்தையார்
உறுதியான சிவ பக்தியுடையவர். சிவபக்தி பண்ணுவதையே தம் வாழ்க்கையாக
அவர் செய்து கொண்டார். அவரிடம் பெற்ற பரம்பரைச் செல்வம் அந்தச் சிவ
பக்தி. ஆதலால் என்னை அறியாமலே அதில் ஒரு பங்கு எனக்கு
அமைந்திருந்தது. ஆனாலும் நானெங்கே! என் தந்தையாரெங்கே!

அவர் எங்களை விட்டுப் பிரிந்தார். அவருடைய மரண காலநிலையை
என் தாயார் அறிந்து கொள்ளவில்லை; நோய்வாய்ப் பட்டு மயக்க
நிலையிலிருந்தார். தந்தையார் காலமான துக்கச் செய்தி காதிற்பட்டவுடனே
அந்த மயக்கம் இருந்த இடம் தெரியாமல் அகன்றது. உடனே எழுந்து
உட்கார்ந்து புலம்பத் தொடங்கி விட்டார். நானும் அதுகாறும் அடையாத
வருத்தத்தை அடைந்தேன்; அழுதேன்; அரற்றினேன். என் நண்பர்கள்
ஆறுதல் கூறினர்; கடிதங்கள் எழுதினர். பலர் தங்கள் வருத்தத்தைச் சரம
கவிகளால் தெரிவித்தனர்.

என் தந்தையார் இயல்புகளை எண்ணி எண்ணி நைந்து சில
பாடல்களை நான் இயற்றினேன். அவரை நினைக்கும்போதெல்லாம் முதலில்
அவரது சிவ பக்தியும் சிவ பூஜையுமே முன் வந்து நின்றன. அவரது சங்கீதத்
திறமையும் தொடர்ந்து ஞாபகத்துக்கு வந்தது. நான் முன்னுக்கு
வரவேண்டுமென்பதில் அவருக்கு இருந்த கவலையையும், என் கல்வியின்
பொருட்டு ஊர் ஊராகத் திரிந்து அங்கங்கே தங்கித் தங்கி என் தமிழ்க் கல்வி
அபிவிருத்தியாகும்படி செய்த பெருமுயற்சிகளையும் எண்ணி எண்ணி
உருகினேன். இந்த எண்ணங்களிற் சில அந்த இரங்கற் பாடல்களிலே
அமைந்தன. அச்செய்யுட்களிற் சில வருமாறு:

“மெய்யார நீறணிந்து விழிமணிமா லிகைபூண்டு
கையார மலரேந்திக் கசிந்துருகித் தினந்தோறும்
மையாரும் மணிமிடற்று மாதேவை அருச்சிக்கும்
ஐயாவென் னையாவென் னையாவெங் ககன்றனையே!”