பக்கம் எண் :

742என் சரித்திரம்

நூறுஉரீஇ - மெய்யில் திருநீற்றைப் பூசி. மை நூறி - குற்றத்தை நீக்கி.
9-ஆம் ஆலையின் சுவை உண்டாக்கும் - ஆகின்ற கரும்பைப்போலச்
சுவையை உண்டாக்கும். 10. ஊறு இகழ்ந்து - இடையூறு நீங்கி. ஆறு உகந்த
சென்னி - கங்காதரனது அருள் ஒங்குக.

பாண்டித்துரைத் தேவர் இங்ஙனம் செய்த உதவியை நான் பாராட்டி
எழுதியதோடு, அம்பலவாண தேசிகரிடமும் தெரிவித்தேன். அவர் உடனே
முந்நூறு ரூபாய் வழங்கினார். இவ்விருவரும் உதவிய பொருளைக் கொண்டு
வீட்டுக்காக நான் வாங்கின கடனை அடைத்து விட்டேன்.

புறப்பொருள் வெண்பாமாலை

பாண்டித்துரைத் தேவர் கடிதம் புறப்பொருள் வெண்பா மாலைப்
பதிப்பைத் தொடங்கத் தூண்டுகோலாக உதவியது. அந்த நூலை அடுத்தபடி
பதிப்பிக்க எடுத்து வைத்துக் கொண்டேன்.

புறப்பொருள் வெண்பாமாலை என்பது புறப்பொருளின் இலக்கணத்தைக்
கூறும் சூத்திரங்களையும் அவ்விலக்கணத்துக்கு இலக்கியமாகிய
வெண்பாக்களையும் கொண்டது. வெண்பாமாலை என்றும் அதற்கு ஒரு பெயர்
உண்டு. சேரகுலத்திற் பிறந்த ஐயனாரிதனார் என்பவர் அந்நூலின் ஆசிரியர்.
என்னிடமிருந்த உரையின் ஆசிரியர் இன்னாரென்று அக்காலத்தில் எனக்குத்
தெரியவில்லை. பிறகு, இராமநாதபுரம் மகாவித்துவான் ஸ்ரீ ரா.
இராகவையங்கார், மதுரைத் தமிழ்ச் சங்கத்திலிருந்த ஒரு சுவடியிற் கண்ட
குறிப்பினால் அவ்வுரையாசிரியர் மாகறல் சாமுண்டி தேவநாயகரென்று
புலப்படுவதாகத் தெரிவித்தார்,

இளம்பூரணம்

புறப்பொருள் வெண்பா மாலைச் சுவடிகள் சில என்பால் இருந்தன.
பின்னும் கிடைக்குமோ வென்று தேடலானேன். தி. த. கனகசுந்தரம் பிள்ளை
என்னிடம் ஒரு பழைய ஏட்டுச் சுவடியைக் கொடுத்து, “இந்தச் சுவடி
இன்னதென்றுவிளங்கவில்லை; புறப்பொருள் பற்றிய வெண்பாவை இடையிலே
கண்டேன்; பாருங்கள்” என்று சொன்னார். நான் அதை எடுத்து வந்து பார்க்
கையில் ஏடுகள் வரிசையாக இராமல் நிலைமாறிக் கோக்கப் பட்டிருந்தன.
மிகவும் சிரமப்பட்டு ஒழுங்குபடுத்திப் பிரதி செய்வித்தேன். அப்பால் அதைப்
படித்துப் பார்க்கையில் தொல்காப்பியப் பொருளதிகாரத்தின் உரையென்று
தெரிந்தது. புறத்