பக்கம் எண் :

748என் சரித்திரம்

என்று மணிமேகலை சுருக்கமாகக் கூறுகிறது. புத்த பிரானைப் புகழும்
பகுதிகள் பல. தயாமூல தர்மத்தைக் கடைப்பிடித்து வாழ்ந்த அவர் திறத்தை
நன்கு வெளிப்படுத்தும் அடிகளை நான் படிக்கும்போதெல்லாம் என் உடல்
சிலிர்க்கும்.

‘தனக்கென வாழாப் பிறர்க்குரியாளன், மாரனை வெல்லும் வீரன்,
தீநெறிக் கடும்பகை கடிந்தோன், பிறர்க்கற முயலும் பெரியோன், துறக்கம்
வேண்டாத் தொல்லோன்’ என்பன முதலிய தொடர்களால் பாராட்டி
இருக்கிறார் மணிமேகலை ஆசிரியர்.

இடையிடையே பிற தமிழ் நூல்களிற் கண்ட தமிழ்ப்பாடல்களைச்
சந்தர்ப்பம் வந்தபோது நான் எடுத்துச் சொல்லுவேன். புத்தர் பிரான் நிர்வாண
மடைந்த காலத்தில் அவர் அருகில் இருந்தோர் புலம்புவதாகக்
கொள்ளுதற்குரிய செய்யுள் ஒன்று வீரசோழிய உரையில் மேற்கோளாகக்
காட்டப் பெற்றிருந்தது;

“மருளறுத்த பெரும்போதி மாதவரைக் கண்டிலமால்
என்செய் கேம்யாம்
அருளிருந்த திரு மொழியா லறவழக்கங் கேட்டிலமால்
என்செய் கேம்யாம்
பொருளறியு மருந்தவத்துப் புரவலரைக் கண்டிலமால்
என்செய் கேம்யாம்”

என்னும் அச் செய்யுளை வாசித்தபோது படிக்க முடியாமல்
நாத்தழுதழுத்தது. ரங்காசாரியரும் அதில் நிரம்பியுள்ள சோகரஸத்தில் தம்மை
மறந்து உருகினார்.

இவ்வாறு புத்த சரித்திரத்திலே ஈடுபட்டு உருகியும் பௌத்த மத
தத்துவங்களை அறிந்து மகிழ்ந்தும் பெற்ற உணர்ச்சியிலே மணிமேகலை
ஆராய்ச்சி நடந்தது.

ஸு மங்களர் செய்த உதவி

மணிமேகலை இலங்கைக்குச் சென்றதாக அக்காப்பியம் தெரிவிக்கிறது.
இலங்கையிலே உள்ள சில இடங்களின் பெயர்கள் அதில் வருகின்றன.
கொழும்புவிலிருந்த பொ. குமாரசாமி முதலியாருக்கு அவ்விடங்களைப் பற்றி
விசாரித்துத் தெரிவிக்க வேண்டுமென்று எழுதியதோடு பௌத்த மத
விஷயங்களை அறிவதற்குத் துணை செய்வார் யாரேனும் இருப்பின்
தெரிவிக்கும்படியும் கேட்டுக் கொண்டேன். அங்கே வித்யோதய கலாசாலையில்
பிரின்ஸிபாலாக இருந்தவரும் பௌத்த மத ஆசிரியருமாகிய ஸு
மங்களரென்னும்